மீனம்பாக்கம்: மீனம்பாக்கம் விமான நிலையத்தில் முதல் ஃபேஸ், கட்டிட பணிகள் நிறைவடைந்து, நவீன இயந்திரங்கள் பொருத்தப்பட்டு, சோதனை அடிப்படையில், நேற்று முதல் செயல்பாட்டிற்கு வந்துள்ளது.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் ரூ.2,400 கோடி மதிப்பீட்டில் 2.36 லட்சம் சதுர மீட்டரில், அதிநவீன ஒருங்கிணைந்த விமான நிலையங்களாக உருவாகி வருகிறது. இந்த பணி 2018ம் ஆண்டு செப்டம்பரில் தொடங்கியது. இதன் முதல் ஃபேஸ் கட்டிடங்கள் 2020 ஆகஸ்ட் மாதத்திற்குள் முடிவடைந்திருக்க வேண்டும். ஆனால் நிலங்கள் கையகப்படுத்துவது, தரையில் பாறைகளை அகற்றுவது மற்றும் கொரோனா வைரசால் ஊரடங்கு போன்ற பல்வேறு காரணங்களால் பணிகள் தாமதமாக நடந்தது. தற்போது முதல் ஃபேஸ் கட்டிட பணி நிறைவடைந்துள்ளன. இதையடுத்து அந்த கட்டிடத்தில், நவீன கருவிகள், உபகரணங்கள் பொருத்தும் பணிகள் நடந்து வருகிறது. இந்த கட்டிடம் 5 தளங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் அடித்தளம் பயணிகளின் உடைமைகளை கையாளுதல் பகுதியாகவும், தரைதளத்தில் சர்வதேச விமான பயணிகள் வருகை பகுதியும், 2வது தளத்தில் புறப்பாடு பயணிகள் பகுதியும் அமைக்கப்படுகின்றன. மற்ற தளங்களில், விமான நிறுவனங்களின் அலுவலகங்கள், பயணிகள் தங்கும் அறைகள், வணிக வளாகங்கள் மற்றும் அலுவலக பணிகளுக்கு ஒதுக்கப்படுகின்றன.
இந்த புதிய கட்டிடத்தில் அடித்தள பகுதியில் பயணிகளின் உடைமைகளை கையாளும் அதிநவீன கருவிகள் பொருத்தும் பணி நிறைவடைந்துள்ளன. நேற்று முதல் வரும் 10ம் தேதி வரை சோதனை அடிப்படையில், பயணிகளின் உடைமைகள் கையாளப்படும் பணி தொடங்கியுள்ளது. இந்த அதிநவீன கருவிகளில் பயணிகளின் உடைமைகள், ஸ்கேனிங் செய்யப்படும்போது, தடை செய்யப்பட்ட பொருட்கள், ஆயுதங்கள், வெடி மருந்துகள் போன்ற பொருட்கள் இருக்குமேயானால், தானியங்கி முறையில், சர்ச்சைக்குரிய அந்த உடமையை தனியே தள்ளி வைக்கும் முறை இந்த நவீன கருவிகளில் அமைக்கப்பட்டுள்ளன. இதற்காக முதற்கட்டமாக, ‘இன் லைன் பேக்கேஜ் சிஸ்டம்’ என்ற 3 இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த இயந்திரங்கள் மூலம் பரிசோதனை நடப்பதால், பயணிகளின் உடைமை தாமதமின்றி துரிதமாக விமானத்துக்கு அனுப்பி வைக்கப்படும். மேலும் இந்த அதிநவீன வசதியின்படி பயணிகளின் உடைமைகள் பரிசோதிக்கும் போது, பயணிகள் அந்த இடத்திற்கு வரவேண்டிய அவசியம் இல்லை. காத்திருப்பு பகுதியில் அமர்ந்திருந்து, வீடியோ மூலம் தங்களுடைய உடமைகள் பரிசோதனையை கண்காணிக்கலாம். அந்த நேரத்தில் தடை செய்யப்பட்ட பொருட்கள் ஏதாவது இருந்தால், அதை தானியங்கி இயந்திரம் மூலம் அகற்றப்படுவதையும் பார்க்கலாம்.
மேலும் அபாயகரமான ஆயுதங்கள், போதை வஸ்துகள் போன்ற பொருட்கள் இருக்குமானால், அந்த நேரத்தில் மட்டும் சம்பந்தப்பட்ட பயணியை அப்பகுதிக்கு நேரில் வரவழைத்து, விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். இந்த புதிய முனையத்தில் பயணிகளின் பரிசோதனை கவுண்டர்கள் 140 அமைக்கப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்காமல் விரைவில் விமானத்துக்கு செல்ல முடியும். தற்போது, சோதனை அடிப்படையில் தொடங்கப்பட்டுள்ள, இந்த புதிய அதிநவீன இயந்திரங்களின் செயல்பாடுகள், 10ம் தேதி வரை நடைபெறும். வெற்றிகரமாக முடிவடைந்தால், அடுத்த கட்ட பணிகள் தொடங்கும். 5 தளங்களுடன் வடிவமைக்கப்பட்டு, அதிநவீன இயந்திரங்கள் பொருத்தப்பட்டு, சென்னை விமான நிலையம் மேலைநாட்டு விமான நிலையங்களை விட சிறப்பான முறையில் அமைக்கப்படுகிறது. மேலும் இயற்கை அழகுடன் கூடிய, சூரிய ஒளிக்கதிர்கள், விமான நிலையத்தின் உள்பகுதிக்குள் வரும்படியும், பனை மரங்கள் வடிவில் தூண்கள் அமைக்கப்பட்டு, கலையின் நுட்பத்துடன் ஜோடிக்கப்பட்டுள்ளது. பயணிகள் ஓய்வு எடுப்பதற்கு அதி நவீன சொகுசு இருக்கைகள், சாய்வு இருக்கைகள் ஏராளமாக அமைக்கப்பட்டுள்ளன. 5 தளங்களிலும் கருவிகள் பொருத்தும் பணி முடிவடைந்த பின்பு, இந்த முதற்கட்ட ஃபேஸ் கட்டிடம் செயல்பாட்டுக்கு வரும். அதற்கு பிறகு, செயல்பாட்டில் இருக்கும் சர்வதேச முணையத்தின் வருகை பகுதி கட்டிடங்கள் இடிக்கும் பணி தொடங்கும். அதன் பின்பு ஃபேஸ் இரண்டுக்கான கட்டிடங்கள் கட்டும் பணி தொடங்கும் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறுகின்றனர்.