மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்போது 108 ஆம்புலன்சில் குவா, குவா: திருத்தணி அருகே பரபரப்பு

திருத்தணி: திருத்தணி அருகே 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் பெண் குழந்தை பிறந்தது. திருத்தணி அடுத்த அருங்குளம் காலனியை சேர்ந்தவர் ஜெனிபர். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு நேற்று  பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கொடுத்த தகவல்படி, அரசின் 108 ஆம்புலன்ஸ் வந்து ஜெனிபரை ஏற்றிக்கொண்டு திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்தது. அவருடன் கணவர் பாலமுருகன் சென்றார். 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் பணிபுரியும் மருத்துவ உதவியாளர் தாட்சாயிணி, ஓட்டுநர் விஜயகுமார் ஆகியோர் இருந்தனர்.

அருங்குளம் கிராமத்தில் இருந்து சிறிது தூரம் ஆம்புலன்ஸ் சென்றதும் திருத்துறை என்ற பகுதியில் வந்தபோது அதிக பிரசவ வலியால் துடித்த ஜெனிபருக்கு மருத்துவ உதவியாளர் தாட்சாயிணி சிகிச்சை அளித்தபோது ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே அழகான பெண் குழந்தை பிறந்தது. இது ஜெனிபருக்கு இரண்டாவது குழந்தையாகும். இதையடுத்து தாயும் குழந்தையும்  திருத்தணி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. தாயும் குழந்தையும் நலமாக உள்ளனர். சரியான நேரத்தில் 108 ஆம்புலன்ஸில் பிரசவம் பார்த்த மருத்துவ உதவியாளர் தாட்சாயிணி மற்றும் ஓட்டுநர் விஜயகுமாருக்கு மருத்துவ குழுவினர் பாராட்டு தெரிவித்தனர்.

Related Stories: