காபூல்: ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சியில் 25 சதவீதம் பெண்கள் வேலையிழந்துள்ளதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது. தாலிபான்கள் ஆட்சியில் கடுமையான கட்டுப்பாடுகளால் 25 சதவீத பெண்கள் வேலைவாய்ப்பை இழந்து தவித்து வருகின்றனர். தாலிபான்கள் ஆட்சியில் 7 சதவீதம் ஆண்களும் வேலைவாய்ப்பை இழந்துள்ளதாகவும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. தாலிபான்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற பின் உலக நாடுகள் உதவிகளை நிறுத்தியதால் ஆப்கனில் ஜிடிபி 30 - 35 சதவீதம் வரை சரிந்துள்ளது.
கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தான் நாட்டை ஒட்டுமொத்தமாகத் தாலிபான் அமைப்பினர் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். ஆட்சியை கைப்பற்றியது முதலே ஆப்கானிஸ்தானில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள், அடக்குமுறைகளை தாலிபான்கள் அமல்படுத்தி வருகின்றனர். முக்கியமாக பெண்களுக்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. வேலை செய்வதற்கும், படிப்பதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
ஆண்கள் துணையின்றி பொது இடங்களுக்கு செல்ல தடை, விமானத்தில் பயணிக்க தடை, ஆடை கட்டுப்பாடு என பல்வேறு கட்டுப்பாடுகள், தடைகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், தலிபான்கள் பெண்களின் கல்வியை நிறுத்தியதோடு, அவர்கள் வேலை செய்யவும், வீட்டிற்கு வெளியே வரவும் தடை விதிக்கபட்டது. இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சியில் 25 சதவீதம் பெண்கள் வேலையிழந்துள்ளதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.

