புழல்: புழல் காவாங்கரையில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் அமைச்சர் மஸ்தான் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். சென்னை புழல், காவாங்கரையில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் அமைந்துள்ளது. இங்கு 328 இலங்கை தமிழர் குடும்பங்களை சேர்ந்த 932 பேர் வசிக்கின்றனர். இம்முகாமில் கடந்த சில நாட்களுக்கு முன் தமிழ்நாடு அரசு சார்பில் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி உபகரணங்கள் வழங்கப்பட்டு உள்ளன. இந்நிலையில், தமிழ்நாடு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். பின்னர் அங்கு தமிழ்நாடு அரசின் சார்பில் நிறுவப்பட்ட விளையாட்டு உபகரணங்களுடன் கூடிய உடற்பயிற்சி மையத்தையும் அமைச்சர் மஸ்தான் பார்வையிட்டார். இதைத் தொடர்ந்து, அங்கு வசிக்கும் இலங்கை தமிழர்களின் குறைகளை கேட்டறிந்தார்.