×

தருமபுரி மாவட்டத்தில் மின்வேலியில் சிக்கி உயிரிழந்த 3 யானைகளின் உடல்கள் நல்லடக்கம்

தருமபுரி: தருமபுரி அருகே மின்சாரம் தாக்கியதில் 3 யானைகள் உயிரிழந்த நிலையில் பிரேத பரிசோதனைக்கு பிறகு யானைகளின் உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டது. தருமபுரி மாவட்டத்தில் விவசாய நிலத்தில் சட்ட விரோதமாக மின்சாரம் எடுத்து மின்வேலி அமைத்த விவசாயி முருகேசன் கைது செய்யப்பட்டார். தர்மபுரி மாவட்டத்தில் மாரண்டஅள்ளி அருகே கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக 5 காட்டு யானைகள் சுற்றித் திரிந்தன. அவற்றை வனத்திற்குள் விரட்டும் முயற்சியில் வனத்துறை ஈடுபட்டி இருந்தது.

இந்த நிலையில், காளிகவுண்டன் கொட்டாய் கிராமத்தில் உள்ள ஒரு தோட்டத்தில் வனவிளங்குகள் நுழையாமல் தடுப்பதற்காக  விவசாயி முருகேசன் என்பவர் மின்வேலி அமைத்துள்ளார். இந்த நிலையில் இன்று காலையில் அந்த வழியாக சுற்றிக்கொண்டிருந்த 3 காட்டுயானைகள் தவறுலாக மின்வேலியை மிதித்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.உயிர் தப்பிய 3 குட்டி யானைகள் இறந்த யானைகளை சுற்றி சுற்றி வந்தன. இது குறித்து தகவல் அறிந்த வந்த பாலக்கோடு வனத்துறையினர் யானைகளின் உடல்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

இறந்தது பெண் யானைகள் என தெரியவந்துள்ளது. இது குறித்து வனத்துறையினர் விசாரணை செய்ததில் பாறைகொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி முருகேசன் அருகே உள்ள மின்கம்பத்தில் சட்ட விரோதமாக மின்சாரம் எடுத்து மின்வேலி அமைத்துள்ளதை கண்டுபிடித்தனர். இதையடுத்து சட்ட விரோதமாக மின்சாரம் எடுத்ததற்காக முருகேசனை போலீசார் கைது செய்துள்ளனர். யானைகள் நடமாடும் இடத்தில் மின்வேலி அமைக்கப்பட்டு இருப்பதை வனத்துறையினர் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த உயிரிழப்பை தடுத்து இருக்கலாம் என வன விலங்கு ஆர்வலர்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே உயிரிழந்த யானைகளின் உடலை கால்நடை மருத்துவர்கள் பரிசோதனை செய்த பின், அடக்கம் செய்யப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர். இந்நிலையில் வனத்துறை கால்நடை மருத்துவர் பிரகாஷ் தலைமையிலான 20 பேர் கொண்ட மருத்துவ குழு யானைகளை உடற்கூறாய்வு செய்த நிலையில், பின்னர் யானைகளின் உடல்கள் ஜேசிபி இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டி  நல்லடக்கம் செய்யப்பட்டது.


Tags : Minveli ,Thurumapuri , Dharmapuri, death of elephants due to electrocution, post-mortem, burial of elephants' bodies
× RELATED தஞ்சை மாவட்டம் சோழபுரம் அருகே வயலில்...