×

இந்து சமய அறநிலையத்துறையின் புதிய அறிவிப்புகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் நடைபெற்றது

சென்னை: இந்து சமய அறநிலையத்துறையின் புதிய அறிவிப்புகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை தனது நிர்வாக கட்டுப்பாட்டிலுள்ள தொன்மை வாய்ந்த திருக்கோயில்களில் பழமை மாறாமல் திருப்பணிகள் மேற்கொள்ளுதல், குடமுழுக்கு நடத்துதல், திருக்குளங்கள் மற்றும் திருத்தேர் சீரமைத்தல், ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து திருக்கோயில் சொத்துக்களை மீட்டெடுத்தல், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வழங்குதல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இப்பணிகள் தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இந்து சமய அறநிலையத்துறை மானியக்கோரிக்கையின் போது அறிவிப்புகள் வெளியிடப்பட்டதோடு அவற்றை முழு வீச்சில் நிறைவேற்றிடும் வகையில் தொடர் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் .பி.கே.சேகர்பாபு தலைமையில் இன்று (06.03.2023) தலைமைச் செயலகத்தில் 2023-2024 ஆம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறையின் புதிய அறிவிப்புகள் குறித்தும், 2021 - 2022 மற்றும் 2022 - 2023 ஆம் நிதியாண்டுகளில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளின் பணி முன்னேற்றம் குறித்தும் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.  

இந்து சமய அறநிலையத்துறையின் சட்டமன்ற மானியக்கோரிக்கையின் போது, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு 2021- 22 ஆம் ஆண்டில் 112 அறிவிப்புகளின் மூலம் 3,769 பணிகளும், 2022 - 23 ஆம் ஆண்டில் 165 அறிவிப்புகள் மூலம் 5,061 பணிகளும் மேற்கொள்ள அறிவிப்புகளை வெளியிட்டார். இந்த அறிவிப்புகளில் நிறைவேற்றப்பட்டவை தவிர்த்து, தற்போது நடைபெற்று வரும் இதர பணிகளின் முன்னேற்றம் குறித்தும், குறிப்பாக ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டிற்கு மேல் அறிவிக்கப்பட்டிருந்த 274 பணிகளின் முன்னேற்றத்தினையும் அமைச்சர் விரிவான ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிகழ்வின்போது சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.சந்தரமோகன், இ.ஆ.ப., இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் க.வீ.முரளீதரன், இ.ஆ.ப., பழநி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் க.சந்திர மோகன், கூடுதல் ஆணையர்கள் ந.திருமகள், சி.ஹரிப்ரியா, மா.கவிதா, தலைமைப் பொறியாளர் சு.ரெகுநாதன், இணை ஆணையர்கள் அர.சுதர்சன், பொ.ஜெயராமன், ஆர்.செந்தில் வேலவன், முனைவர் ந.தனபால், கே.ரேணுகாதேவி, மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Tags : Hindu Religious Endowments Department ,Minister ,PK Shekharbabu , Department of Hindu Religious Charities, Consultation Meeting, Minister PK Shekharbabu,
× RELATED வாயால் மட்டுமே வடை சுட்டுக்கொண்டு...