நீலகிரியில் ஓராண்டிற்கு பின் பூண்டு விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் விளையும் பூண்டின் விலை உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.  நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தப்படியாக உருளைக்கிழங்கு, கேரட், முட்டைகோஸ், பீட்ரூட், பீன்ஸ் போன்ற காய்கறிகள் அதிகளவு பயிரிடப்படுகின்றன. இதற்கு அடுத்தப்படியாக நீலகிரி பூண்டு பயிரிடப்படுகிறது. பூண்டு மாவட்டத்தின் குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டுமே பயிரிடப்படுகிறது.

மாவட்டத்தில் கோத்தி பாலாடா, கொல்லிமலை, கல்லட்டி, எப்பநாடு, அணிக்கொடை, தேனாடுகம்பை, நஞ்சநாடு, இத்தலார் போன்ற பகுதிகளிலும் பயிரிடப்படுகிறது. சாதாரணமாகவே, நீலகிரி பூண்டிற்கு காரம் மற்றும் சுடை அதிகம் என்பதால் மார்க்கெட்டில் மற்ற பூண்டுகளை காட்டிலும் இதற்கு கிராக்கி அதிகம். தற்போது சீனா, இமாச்சல், பெங்களூர், ராஜஸ்தான், புனே போன்ற பகுதிகளில் இருந்தும் அதிகளவு பூண்டுகள் வருகிறது.

இதனையே சிலர் நீலகிரி பூண்டு எனக் கூறி விற்கின்றனர். பெரும்பாலான கடைகளில் தற்போது நீலகிரி பூண்டு கிடைப்பதில்லை. ஒரு சில கடைகளில் மட்டுமே கிடைத்து வருகிறது. இந்நிலையில், கடந்த ஓராண்டிற்கு மேலாக நீலகிரி பூண்டிற்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் சிரமத்திற்குள்ளாகினர். கிலோ ஒன்று ரூ.100 முதல் 140 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த பூண்டு தற்போது கிலோ ஒன்றுக்கு ரூ.280 வரை தரத்திற்கு ஏற்றவாறு விலை போகிறது. நீலகிரியில் விளையும் பூண்டுகள் மார்க்கெட்டில் விற்பனைக்கு வருவது அரிதாகவே உள்ளது.

 

இருந்த போதிலும், இதனை மக்கள் வாங்கிச் செல்ல ஆர்வம் காட்டுகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் மட்டுமே பூண்டு சாகுபடி செய்யப்படுகிறது. பல்வேறு காரணங்களால், குறைந்தளவே செய்யப்படுவதால் எப்போதும், இதற்கு விலை உள்ளது. ஆனால், கடந்த ஓராண்டு காலமாக நீலகிரி பூண்டிற்கு உரிய விலை கிடைக்காமல் இருந்தது. தற்போது கிலோ ஒன்றுக்கு ரூ.280 வரை கிடைக்கிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தற்போது அறுவடை காலம். இதனால், பலரும் தற்போது பூண்டு அறுவடையில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: