கூடலூர் பஸ் நிலைய விரிவாக்க பணிகளுக்காக 60 ஆண்டு காலம் நிழல் தந்த மரங்கள் வெட்டி அகற்றம்

கூடலூர் :  கூடலூர் பஜார் கடலூர் மைசூர் சாலையில் சுங்கம் ரவுண்டனாவை ஒட்டி அமைந்துள்ள அரசு போக்குவரத்து கழக பேருந்து நிலையம் மற்றும் பணிமனை புதுப்பித்தல் பணிகளுக்காக இரண்டு நிழல் தரும் மரங்கள் நேற்று வெட்டப்பட்டன.கூடலூர் மைசூர் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள இந்த பேருந்து நிலையம் மற்றும் பணிமனை விரிவாக்கம் மற்றும் புதுப்பித்தல் பணிகள் கடந்த சில வருடங்களாக நடைபெற்று வருகிறது. தற்போது பணிகள் இறுதி கட்டத்தை அடைந்துள்ளன.

இந்த நிலையில் புதிய பேருந்து நிலையத்தின் பின்புறம் தாழ்வான பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பணிமனைக்குள் பேருந்துகள் சென்று வருவதற்கு வசதியாக சாலை அமைக்கும் பணிகளுக்காக வருவாய்த்துறையினர் மேற்பார்வையில் இந்த மரங்கள் நேற்று வெட்டப்பட்டன. இப்பணிகளுக்காக நேற்று காலை இப் பகுதியில் மின் விநியோகத்தை துண்டித்த மின்வாரிய ஊழியர்கள் மரங்களை ஒட்டி செல்லும் மின்கம்பிகளை அகற்றி மரங்களை வெட்டுவதற்கு வசதி ஏற்படுத்தி கொடுத்தனர். மரம் வெட்டும் பணியின் போது பாதுகாப்பிற்காக போது போக்குவரத்து அவ்வப்போது நிறுத்தி பாதிப்புகள் ஏற்படாதவாறு காவல்துறையினர் பணிகள் மேற்கொண்டனர்.

எனினும்  நிழல் தரும் மரங்களை வெட்டாமலேயே பேருந்து நிலையத்தின் உட்புற வழியாக பணிமனைக்குள் பேருந்துகள் சென்று வர வழி ஏற்படுத்தும் வகையில் இப்பணிகளை திட்டமிட்டு இருக்கலாம் என பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த நிர்வாகி வாசு கூறுகையில். ‘ கடந்த 1960 ஆம் ஆண்டுகளில் கூடலூர் பகுதியை சேர்ந்த சாத்துக்குட்டி நாயர் என்பவரால் பல இடங்களில் சாலை ஓரங்களில் நிழல் தரும் மரங்கள் நடப்பட்டன. அவற்றில் இந்த இரண்டு மரங்களும் அடங்கும். இதுவரை காலமும் இப்பகுதியில் பேருந்துகளுக்காக வெயில்  நேரங்களில் நிழலுக்கு ஒதுங்கி காத்திருந்த லட்சக்கணக்கானோருக்கு நிழல் தந்த இந்த இரண்டு மரங்கள் வெட்டப்பட்டது கவலைக்குரிய விஷயமாக உள்ளது.

கடும் வெயில் காலங்களிலும் இந்த இரண்டு மரங்கள் இப்பகுதியில் குளிர்ச்சியான சூழலை உருவாக்கிக் கொண்டிருந்தன. இது போன்ற பொதுமக்கள் பயன்படும் வகையில் நிழல் தரும் மரங்களை வெட்டுவதை தவிர்த்து மாற்று வழிகளை அதிகாரிகள் கையாண்டு இருக்கலாம். மரங்களை வெட்டுவதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும் தற்போது இந்த மரங்கள் வெட்டப்பட்டுள்ளன.

பேருந்து நிலையத்தை  ஒட்டி சாலை ஓரத்திலேயே ஏற்கனவே பணிமனை இயங்கி வந்த நிலையில் தற்போது பேருந்து நிலையம் விரிவுபடுத்தப்பட்டு பேருந்து நிலையத்தின் பின்புறம் கீழ் பாகத்தில் பணிமனை அமைக்கப்பட்டு உள்ளது. பிரதான போக்குவரத்து சாலையை ஒட்டி இப்பகுதியில் அமைந்துள்ள பேருந்து நிலையத்துக்குள் பேருந்துகள் சென்று வருவது, பணிமனைக்குள் சென்று வெளியே வருவது போன்ற காரணங்களால் அடிக்கடி இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.

போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் இந்த பேருந்து நிலைய விரிவாக்க பணிகள் அமைய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருந்தது. இந்த  நிலையில் மரங்களை வெட்டி அகற்றி விட்டு அப்பகுதியில் இருந்து பணிமனைக்குள் செல்ல சாலை அமைப்பதால் பேருந்து நிலையத்திற்குள் செல்லும் பேருந்துகள் பயணிகளை இறக்கி விட்டு மீண்டும் பிரதான சாலைக்கு வந்து  பணிமனைக்குள் சென்று திரும்புவதால் போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து நீடிக்கும் நிலையே உள்ளது.  

பல்வேறு பகுதிகளிலும் சாலை விரிவாக்கம் மற்றும் வளர்ச்சி என்ற பெயரில் மரங்களை வெட்டுவது வாடிக்கையாகிவிட்டது. அதற்கு ஈடாக மரங்கள் வளர்ப்பும் திட்டங்கள் எதுவும் முறையாக செயல்படுவதில்லை. இந்த நிலையில் பள்ளி கல்லூரி மாணவர்களை சாலையில் ஊர்வலமாக அழைத்துச் சென்று மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் என்று கோஷங்கள் இட வைப்பது மக்கள் மத்தியில் ஒரு கேலிக்குரிய விசயமாக மாறி வருகிறது.

பல பகுதிகளில் பழமை மாறாமலேயே வளர்ச்சி பணிகளும் புதுப்பித்தல் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்கு ஏற்றவாறு திட்டங்களும் தீட்டப்படுகின்றன. அதேபோல் பேருந்து நிலையம், பணிமனை விரிவாக்க பணிகளுக்கு திட்டமிட்டு இருந்தால் நிழல் தரும் மரங்களை வெட்ட வேண்டிய நிலை ஏற்படாது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: