ஊட்டி : தமிழகத்தில் பீகார், ஓடிசா உள்ளிட்ட வட மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது. இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டதில் வேறு மாநிலங்களில் நடைபெற்ற சில சம்பவங்களின் வீடியோக்களையும், படங்களையும் தமிழ்நாட்டில் நடைபெற்றதாக வேண்டுமென்றே வதந்தி பரப்பியது தெரிய வந்தது. அவ்வாறு வதந்தி பரப்பியவர்கள் மீது சட்டரீதியாக, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது. வதந்தி பரப்பியவர்களை கைது செய்ய தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஊட்டியில் கட்டப்பட்டு வரும் நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ள வட மாநில தொழிலாளர்களை நேற்று மாலை தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ., வேலு., நீலகிரி தொகுதி எம்பி., ராசா ஆகியோர் சந்தித்து உரையாடினார். தொடர்ந்து அமைச்சர் எ.வ., வேலு நிருபர்களிடம் கூறியதாவது: ஊட்டியில் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்டிட பணிகள் மூன்று தொகுப்புகளாக இரு ஒப்பந்ததாரர்களின் மூலம் கட்டப்பட்டு வருகிறது. கட்டுமான பணிகளில் தமிழ்நாடு மற்றும் வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
குறிப்பாக ஜார்க்கண்டை 252 தொழிலாளர்கள், பீகாரை சேர்ந்த 185 பேரும், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 247 பேர், உத்தர பிரதேசத்தை சேர்ந்த 138 பேர், ஒடிசாவை சேர்ந்த 128 பேர் என மொத்தம் 950 பேர் பணியாற்றி வருகின்றனர். கடந்த 2020ம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார்கள். அவர்களுக்கு தேவையான பாதுகாப்புகள் தரமான மற்றும் சத்தான உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக வாரத்துக்கு இரு முட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இரு மாதங்களுக்கு ஒரு முறை வடமாநில தொழிலாளர்கள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன. ஊட்டி குளிர் பிரதேசமாக உள்ள நிலையில் தற்போது குளிர்காலம் என்பதால் அவர்களுக்கு ஸ்வெட்டர் வாங்கி தரப்பட்டுள்ளது. அவர்கள் தங்கி இருக்கும் அறைகளில் ஹீட்டர் வசதியும் ஏற்பட்டு தரப்பட்டுள்ளது. அவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் அவர்களுக்கு எந்த குறைகளும் இல்லை. கடந்த ஒரு வார காலமாக வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுகிறார்கள் வதந்திகள் பரப்பப்பட்ட நிலையில், பொதுப்பணித்துறை அமைச்சர் என்ற முறையில் என்னை நீலகிரி மாவட்டத்திற்கு சென்று வட மாநில தொழிலாளர்களுடன் பேசி வர தமிழக முதல்வர் அறிவுறுத்தினார்.
இதன் அடிப்படையில் இன்று (நேற்று) மருத்துவமனை கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ள வட மாநில தொழிலாளர்களை சந்தித்து உரையாடினோம். அவர்களும் தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவித்தனர். கொரோனா காலத்தில் இங்குள்ள வடமாநில தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டது அனைவருக்கும் தெரியும். நீலகிரி மாவட்டத்தில் தேயிலை தோட்டங்கள் உள்ளிட்ட பிற தொழில்களில் சுமார் 11 ஆயிரம் வடமாநில தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். அவர்கள் இங்கு பாதுகாப்பாக இருப்பதால் தான் இங்கேயே தொடர்ந்து பணியாற்றுகின்றனர். அவர்களுடைய குழந்தைகளை அங்கன்வாடியில் சேர்த்து படிக்க வைக்கிறார்கள், என்றார்.
தொடர்ந்து மருத்துவக் கல்லூரி கட்டுமான பணியில் ஈடுபட்டு வரும் வட மாநில தொழிலாளர்கள் அனைவருக்கும் சூடான சுவையான உணவுகள் பரிமாறப்பட்டன. இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் அம்ரித், மாவட்ட எஸ்பி பிரபாகர், நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மனோகரி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அய்யாசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.