×

தள்ளுபடியான கடன் தொகையை மீண்டும் செலுத்த வலியுறுத்தும் கூட்டுறவுக் கடன் சங்கம்-இறந்தவரின் உறவினர்கள் புகார்

ஈரோடு : கடன் பெற்றவர் உயிரிழந்ததையடுத்து, தள்ளுபடி செய்யப்பட்ட கடன் தொகையை 2 ஆண்டுக்கு பின்னர் மீண்டும் செலுத்துமாறு கூட்டுறவு கடன் சங்கத்தினர் நிர்பந்திப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, மாவட்ட வருவாய் அலுவலர்  சந்தோஷினி சந்திராவிடம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நேற்று மனு அளிக்கப்பட்டது. அதுகுறித்த விவரம் வருமாறு: பர்கூர் மலைப்பகுதி பெஜில்பாளையத்தை சேர்ந்தவர் மாதேஸ்(32). கூலித்தொழிலாளி.

இவர், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்து விட்டார்.இவரது மனைவி சாந்தி (30). அங்கன்வாடி ஊழியரான இவரும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட்டார்.இவர்களுக்கு இளம்பாரதி (8), திலீபன்(5) என்ற குழந்தைகள் உள்ளனர். இவர்களை, மாதேஸின் அக்கா சரோஜா மற்றும் சாந்தியின் தாயார் சின்னத்தாய் ஆகியோர் வளர்த்து வருகின்றனர்.

இந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் அக்குழந்தைகளின் தாயார் சாந்தி, மகளிர் குழுவில் ரூ.47,000 கடன் பெற்றிருந்தார். அதில், 3 தவணை தொகையை மட்டும் செலுத்தி இருந்த நிலையில், உடல் நலக்குறைவால் அவர் இறந்துவிட்டார். அதன்பின் சில மாதங்களில், அவர் செலுத்த வேண்டிய தொகையை தள்ளுபடி செய்துவிட்டதாக மகளிர் சுய உதவிக் குழுவினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் நிலுவையில் உள்ள ரூ. 47,000ஐ அக்குழந்தைகளை வளர்க்கும் சரோஜா மற்றும் சின்னத்தாய் ஆகியோர் சேர்ந்து செலுத்த வேண்டும் என கூட்டுறவுக் கடன் சங்கத்தினர் வலியுறுத்துகின்றனராம்.எனவே, இது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொண்டுள்ளனர்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முன்னாள் படைவீரர் விதவையர் கூட்டமைப்பினர் மனு: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முன்னாள் படை வீரர் விதவையர் கூட்டமைப்பினர் மனு அளித்துள்ளனர்.இதுகுறித்து, ஈரோடு மாவட்ட முன்னாள் படைவீரர்கள் மற்றும் முன்னாள் படைவீரர்கள் விதவையர்கள் கூட்டமைப்பினர் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் நேற்று அளித்துள்ள மனு விவரம்: முன்னாள்  மற்றும் இன்னாள் படைவீரர்களுக்கு வீட்டு வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்.

முன்னாள் படைவீரர் விதவையருக்கு ஆவின் நிறுவனம் வழங்கியுள்ள ஆவின் பொருள்கள் விற்பனை நிலைய உரிமை அவர்களுக்கே கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். முன்னாள் படை வீரர்களுக்கு தீபாவளி பண்டிகை ஊக்கத்தொகை வழங்க வேண்டும்.பணியின்போது உயிரிழக்கும் சீருடைப் பணியாளர் குடும்பத்தினருக்கு ரூ. 1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். குடிசை மாற்று வாரிய வீடுகளை நிலுவைத் தொகையின்றி வழங்க வேண்டும். உள்ளாட்சித் தேர்தலில் முன்னாள் படைவீரர்களுக்கு தனி இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும். முன்னாள் படை வீரர்களின் விதவைகளுக்கு வழங்கப்படும் கேண்டீன் கார்டு திட்டத்தை எளிமைப்படுத்த வேண்டும்.

முன்னாள் படைவீரர்களின் விதவைகளுக்கு 100% ஓய்வூதியம் வழங்கிட வேண்டும். குடும்ப ஓய்வூதிய ஆவணங்களை எளிமைப்படுத்த வேண்டும். பல ஆண்டுகளாக முன்வைக்கப்பட்டு வரும் மேற்கண்ட எங்களது கோரிக்கைகள் இதுவரை  ஒன்று கூட நிறைவேற்றப்படவில்லை. எனவே, அவற்றை நிறைவேற்றிட வலியுறுத்தி ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம், நாமக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த முன்னாள் படை வீரர் விதவையர் கூட்டமைப்பின் கோரிக்கை வலியுறுத்தக் கூட்டம் வரும் 19ம் தேதி நடத்தப்படவுள்ளது. எனவே, எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றிட உரிய ஆவண செய்யவேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அரசு மாதிரிப் பள்ளியில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்பக் கோரி மனு:  பன்னீர் செல்வம் பூங்கா அருகில் உள்ள அரசு மாதிரி மகளிர் மேல் நிலைப் பள்ளியில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து,அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவிகளின் பெற்றோர்கள் சார்பில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திராவிடம் அளித்துள்ள மனு விவரம்:

ஈரோடு, பன்னீர் செல்வம் பூங்கா அருகில் உள்ள அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை வகுப்புகள் உள்ளன. இப்பள்ளியில் கடந்த 4 ஆண்டுகளாக ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இப்பள்ளியில், 500க்கும் மேற்பட்ட மாணவிகள் ஆங்கில வழியில் கல்வி பயின்று வருகின்றனர். தற்போது 5 ஆசிரியர்கள் மட்டுமே மாற்று பணியில் இங்கு பணியாற்றி வருகின்றனர். அவர்களையும், அவர்கள் பணி செய்யும் பள்ளியிலேயே பணியாற்ற திரும்ப அழைத்துள்ளனர்.

எனவே, அவர்களும் இப்பள்ளிக்கு வராமல் போனால் மாணவிகளின் கல்வி முற்றிலும் பாதிப்புக்குள்ளாகும். இப்பள்ளியில் 8 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. தேவையான ஆசிரியர் இல்லாததால் மாணவிகளின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. பாரம்பரியமான இப்பள்ளியில் ஆசிரியர்கள் இல்லாமல், மாணவிகள் மட்டும் வந்து செல்வது மிக மோசமான முன்னுதாரணமாகும்.எனவே, உடனடியாக இப்பள்ளியில் ஆசிரியர்களை நியமித்திட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காகித ஆலை மீண்டும் செயல்பட அனுமதிக்க கூடாது பொதுமக்கள் மனு: கோபி அருகே, தண்ணீர்பந்தல்புதூரில் மாசு ஏற்படுத்தியுள்ள காகித ஆலை மீண்டும்  செயல்ப அனுமதிக்கக்கூடாது என வலியுறுத்தி மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திராவிடம் ஊர்மக்கள் நேற்று மனு அளித்தனர்.அதுகுறித்து, அவர்கள் கூறியதாவது:கோபி, கூகலூர் அருகே உள்ள தண்ணீர்பந்தல்புதூரில் நாங்கள் சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோரு பல தலைமுறையாக வசித்து வருகிறோம்.எங்கள் பகுதியில் கடந்த 20 ஆண்டுக்கு முன் காகித ஆலை உருவானது. கடந்த 15 ஆண்டுகளாக அந்த ஆலையில் இருந்து தண்ணீரை சுத்திகரிக்காமல், வெளியேற்றுகின்றனர்.

இதனால், நிலத்தடி நீர்,குடிநீர் பாதிக்கப்பட்டு, கலங்கிய நிலையில், துர்நாற்றம் வீசுகிறது. இந்த தண்ணீர கால்நடைகள் கூட குடிக்க முடியவில்லை. மேலும், இப்பகுதி மக்களுக்கு கேன்சர், சரும நோய் உள்ளிட்ட பல நோய்கள் ஏற்பட்டு வருகின்றனர். எனவே அந்த ஆலையை இயக்கக்கூடாது என வலியுறுத்தி நாங்கள் போராட்டம் நடத்தினோம். இதையடுத்து, மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அப்பகுதியை ஆய்வு செய்து, ஆலையின் மின் இணைப்பை துண்டித்தனர். இந்நிலையில் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, ஆலையை திறக்க தற்போது அனுமதி பெற்றுள்ளனர்.
கடந்த 2  நாள்களுக்கு முன் போலீஸ் பாதுகாப்புடன் ஆலையை திறந்து செயல்பாட்டை தொடங்க முயன்றனர்.

மக்கள் எதிர்ப்பால் அது தடுத்தௌ நிறுத்தப்பட்டது.எனவே, மீண்டும் ஆலையை திறக்கும் நடவடிக்கை மேற்கொள்வதை தடுத்து, ஆலையை நிரந்தரமாக மூட  நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆலை கழிவு நீரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். என்றனர்.பெற்றோர் மற்றும் சக ஆசிரியர்களை மிரட்டும் ஆசிரியர் மீது நடவடிக்கை கோரி மனு: பெற்றோர் மற்றும் சக ஆசிரியர்களை மிரட்டும் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திராவிடம் நேற்று மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து, ஈரோடு மாவட்டம், புன்செய் புளியம்பட்டி கே.வி.கே. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சார்பில் அளிக்கப்பட்டுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: புளியம்பட்டி கே.வி.கே. ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் பணியாற்றும் முதுகலை இயற்பியல் ஆசிரியர் வகுப்புகளுக்கு முறையாக செல்வதில்லை.மேலும், அவர் முறையாக பணி செய்யும் ஆசிரியர்கள் பற்றி, கல்வித்துறைக்கு பொய்யான தகவல்களை வழங்கி, அவர்களை பணியிட மாறுதல் செய்தும், அவர்களாகவே பணியிடம் மாறுதல் பெற்று செல்லும் நிலையையும் ஏற்படுத்தி வருகிறார்.

மேலும், அவர் மீது, நீட் தேர்வு பயிற்சி வகுப்பு முறையாக எடுக்கவில்லை, பிற ஆசிரியர்கள், தற்போது படிக்கும் மாணவர்கள், முன்னாள் படித்த மாணவர்களுடன் மோதல் போக்குடன் செயல்படுதல் உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் கல்வித் துறையால் விசாரிக்கப்பட்டுள்ளன.மேலும் தன் மீது புகார் தெரிவிக்கும் ஆசிரியர்,பெற்றோர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் புகார் தெரிவித்துவிடுவேன் என்றும் மிரட்டி வருகிறார்.

கல்வித்துறையினர், தலைமை ஆசிரியர் உதவியுடன், அவர் பல்வேறு புகார்களில் இருந்து தப்பிக் கொள்கிறார். இவரால், பள்ளியின் நிர்வாகம், மாணவர்களின் கல்வி போன்றவை பாதிப்புக்குள்ளாகி வருகின்றன. எனவே, இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.

Tags : Cooperative Credit Co ,Credit Symbol , Erode : Co-operative loan to repay the waived loan amount after 2 years after the death of the borrower.
× RELATED கடம்பூர் மலைப்பகுதியில் அரசு பஸ்சை வழிமறித்த யானையால் பரபரப்பு