திருவண்ணாமலையில் வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள்-கலெக்டர் முருகேஷ் வழங்கினார்

திருவண்ணாமலை : திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டத்தில், மனு அளித்த மாற்றுத்திறனாளிகளுக்கு உடனடியாக உதவி உபகரணங்களை கலெக்டர் வழங்கினார்.திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் பா.முருகேஷ் தலைமையில் நேற்று நடந்தது.

அதில், டிஆர்ஓ பிரியதர்ஷினி, உதவி கலெக்டர் (பயிற்சி) ரஷ்மிராணி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) வெற்றிவேல், ஆர்டிஓ மந்தாகினி உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.கூட்டத்தில், பட்டா மாற்றம், கல்வி உதவித் தொகை, முதியோர் உதவித் தொகை, சாதிச்சான்று, வேலை வாய்ப்பு, சுய தொழில் கடனுதவி, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை மற்றும் உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 327 பேர் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

மேலும், கடந்த வாரங்களில் பெறப்பட்ட மனுக்களில் மீது எடுக்கப்பட்ட  நடவடிக்கைகள் குறித்து, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம கலெக்டர் ஆய்வு நடத்தினார். மேலும், நிலுவையில் உள்ள மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.அதைத்தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் குறைதீர்வு கூட்டம் நடைபெறும் முதல் தளத்திற்கு வர இயலாது என்பதால், அவர்கள் காத்திருந்த கலெக்டர் அலுவலக தரை தளத்துக்கு கலெக்டர் நேரில் சென்று கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

அப்போது, பராமரிப்பு உதவித்தொகை, உதவி உபகரணங்கள், வங்கிக்கடனுதவி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்காக மாற்றுத்திறனாளிகள் மனு அளித்தனர். அதில், ஊன்றுகோல், மூன்று சக்கர சைக்கிள் உள்ளிட்ட உதவி உபகரணங்கள் கேட்டு மனு அளித்தவர்களுக்கு உடனடியாக உதவிகள் வழங்க கலெக்டர் உத்தரவிட்டார். அதன்படி, உடனடியாக 3 பேருக்கு உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டன.இந்நிலையில், வழக்கம் போல தீக்குளிப்பு முயற்சி சம்பவங்களை தடுப்பதற்காக, கலெக்டர் அலுவலகத்தில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Related Stories: