×

விருத்தாசலம் டிவி புத்தூரில் உள்ள ஏரி ஆக்கிரமிப்பை அகற்றி தூர்வார நடவடிக்கை-விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் வலியுறுத்தல்

விருத்தாசலம் :  விருத்தாசலம் டிவி புத்தூர் ஏரி ஆக்கிரமிப்பை அகற்றி தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்து வந்த விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நீண்ட தூரம் பயணம் செய்து வரும் விவசாயிகளின் நலன் கருதி அந்தந்த பகுதியின் உள்ள தாலுகா அலுவலகங்களில் நடத்திக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியன் கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்த அறிவிப்பின்படி நேற்று விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் விவசாயிகளின் குறை தீர்ப்பு முதல் கூட்டம் நடைபெற்றது. விருத்தாசலம் தாசில்தார் அந்தோணி ராஜ் தலைமை தாங்கினார்.

வருவாய்த்துறை, வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் மணிமுக்தாறு பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் தங்க தனவேல் கூறியதாவது, விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஈ நாம் திட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும். விவசாயிகளுக்கான அனைத்து அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றித் தர வேண்டும். 15 நாட்களுக்கு மேலாக வியாபாரி ஒருவர் விவசாயிகளுக்கு பணம் வழங்காமல் தாமதம் செய்து வருகிறார். உடனடியாக விவசாயிகளுக்கு பணத்தை பெற்று தர வேண்டும்.

வியாபாரிகள் விவசாயிகளுக்கு உடனுக்குடன் பணம் வழங்குவதற்கு அறிவுறுத்த வேண்டும் என கூறினார்.அதுபோல் அரசு நேரடி நெல் கொள் முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் கையூட்டு பெறுவதை தடுக்க வேண்டும், குறுவை சாகுபடி பணிக்கு முன்பு வண்டல் மண் எடுக்க அனுமதிக்க வேண்டும். பரவலூர் அண்ணா நகர் பகுதியில் மின்சார இயக்கம் கோமங்கலம் துணை நிலையத்தில் இருந்தும், பராமரிப்பு பணிகள் பரூர் துணை மின் நிலையத்தில் இருந்தும் நடைபெறுகிறது. இதனால் மின் தடை ஏற்பட்டால் சரி செய்வதற்கு காலதாமதம் ஏற்படுகிறது.

இதனால் விவசாய நீர்ப்பாசனம் செய்ய முடியாத நிலை நிலவி வருகிறது. ஒரே துணை மின் நிலையத்தின் கீழ் இயக்கம் மற்றும் பராமரிப்பு இரண்டு பணிகளையும் கொண்டு வர வேண்டும்.  டிவி புத்தூர் பகுதியில் உள்ள ஏரியின் ஆக்கிரமிப்பை அகற்றி, ஏரி மற்றும் வாய்க்காலை தூர்வாரி தர வேண்டும் என பலமுறை கோரிக்கையை விடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் ஆக்கிரமிப்பின் அளவு அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

உடனடியாக ஏரியை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என விருத்தகிரீஸ்வரர் உழவர் உற்பத்தியாளர் நிறுவன தலைவர் அலெக்சாண்டர், சரவணன், பாலகிருஷ்ணன், முத்து உள்ளிட்ட விவசாயிகள் பலர் தங்களது கோரிக்கைகளை முன் வைத்தனர்.
முடிவில் தாசில்தார் அந்தோணி ராஜ் விவசாயிகள் கூறிய அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றி தர நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Tags : Vrudhachalam ,TV Puttur ,durwara , Vridthachalam: Vridthachalam TV should remove the encroachment of Puttur Lake and take clearing action in the grievance meeting of the farmers.
× RELATED இது தகவல்கள் எளிதாக கிடைக்கும் காலம்:...