×

தொண்டி பகுதியில் கடற்பாசி வளர்ப்பில் ஆர்வம் காட்டும் மீனவர்கள்-வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி

தொண்டி : தொண்டி அருகே காரங்காடு, நம்புதாளை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மீனவர்கள், தற்போது கடற்பாசி வளர்ப்பில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த கடற்பாசிகள் வெளிநாடுகளுக்கு அதிகம் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.கடல் விவசாயம் எனப்படும் கடற்பாசி வளர்ப்பில் தொண்டி, நம்புதாளை, லாஞ்சியடி, காரங்காடு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனார். அரசும் அவர்களுக்கு பல்வேறு உதவிகள் செய்து வருகிறது. மீனவர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் உதவியுடன் இந்த தொழிலை மேற்கொள்கின்றனர். இதன்படி கடற்பாசி வளர்ப்பில் மிதவை முறை, மோனோ முறை, டியூப் லைன் முறை ஆகியவற்றை இப்பகுதி மீனவர்கள் பின்பற்றுகின்றனர்.

இதன்படி கடலின் குறிப்பிட்ட பகுதியில் கடற்பாசி விதைகள் போட்டு 40 முதல் 50 நாட்கள் வரை வளர்க்கின்றனர். பின்னர் நன்கு வளர்ந்த பாசிகளை எடுத்து வெயிலில் உலர்த்தி விற்பனை செய்கின்றனர். அவற்ைற உள்ளுர் வியாபாரிகள் கொள்முதல் செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். கடலில் பாசியை வளர்க்க துவங்கிய நான் முதல் அவற்றை மீன் கடித்து விடாமல், அழுக்கு சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாக உள்ளது.

மேலும் 3 மீட்டர் கயிற்றில் 20 நாற்றுகளை (பாசி) கட்டிவைக்க முடியும். குறிப்பிட்ட நாளில் இந்த தொகுப்பில் இருந்து 200 கிலோ வரையிலும் கடற்பாசி எடுக்கப்படுகிறது. இது செடிகளுக்கு உரமாகவும், சாக்லேட், ஜெல்லி, தொதல் உள்ளிட்டவற்றை தயாரிக்கவும், மருத்துவத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது.கடற்பாசி வளர்ப்பில் ஈடுபட்டுள்ள பாம்பன் சுகந்தி கூறும்போது, பாசி வளர்ப்பில் முதன் முறையாக ஈடுபடும் போது மட்டும் ஒரு கிலோவிற்கு ரூ.3 ஆயிரம் வரை செலவு செய்ய வேண்டும். பிறகு அதனை வளர்ப்பதில் எந்த செலவும் இன்றி தினந்தோறும் பராமரிப்பு பணிகளை மட்டுமே மேற்கொள்ள வேண்டும்.

பின் வளர்ச்சியடைந்த கடற்பாசியை எடுத்து மழை உள்ளிட்ட தண்ணீரில் நனையாமல் உலர்த்த வேண்டும். அதன்பிறகு அவற்றை ஒரு கிலோ ரூ.50 வரையிலும் விற்பனை செய்யலாம். எங்கள் குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து கடற்பாசி வளர்ப்பில் ஈடுபட்டுள்ளோம். தமிழ்நாடு அரசு பல்வேறு விதத்தில் எங்களுக்கு உதவுகிறது. இருப்பினும் அதிக எண்ணிக்கையில் மீனவர்களை கடற்பாசி வளர்ப்பில் ஈடுபடுத்த தேவையான நடவடிக்கைகளை அரசு தரப்பில் மேற்கொள்ள வேண்டும் என்றார்.

Tags : Tondi , Thondi: Fishermen from Karangadu, Nambuthalai and other areas near Thondi are now showing more interest in seaweed farming.
× RELATED விழிப்புணர்வு கூட்டம்