கோவை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற காரமடை அரங்கநாத சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்-பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

மேட்டுப்பாளையம் :  பிரசித்தி பெற்ற காரமடை அரங்கநாத சுவாமி கோயிலில் பக்தர்களின்  கோவிந்தா,  கோவிந்தா கோஷம் விண்ணை பிளக்க தேரோட்டம் நடந்தது. இதில்  பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். கொங்கு மண்டலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ திருத்தலங்களில் ஒன்றாக காரமடை அரங்கநாதர் சுவாமி கோயில் விளங்குகிறது. இக்கோயிலில் மாசி மக தேர்த்திருவிழா கடந்த 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதைத்தொடர்ந்து தினந்தோறும் அன்னபக்‌ஷி, சிம்ம, அனுமந்த, கருட வாகனங்களில் சப்பரத்தில் எழுந்தருளிய காரை அரங்கன் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

தொடர்ந்து, நேற்று முன்தினம்  பெட்டத்தம்மன்  மலையில் இருந்து அம்மன் அழைத்து வரும் நிகழ்வு நடைபெற்றதுஇதையடுத்து நேற்று காலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத அரங்கநாத பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில் கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல்  சுமார் 1,500க்கும் மேற்பட்ட ஆண், பெண் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத அரங்கநாத பெருமாள் நான்கு ரத வீதியில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று மாலை நடைபெற்றது.

இதனையொட்டி அரங்கநாத பெருமான், சிறப்பு பூஜைக்கு பின்னர் நேற்று அதிகாலை 5.30 மணியளவில் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் தம்பதி சமேதராய் திருத்தேருக்கு எழுந்தருளினார். அறநிலையத்துறை இணை ஆணையர் பரஞ்ஜோதி, உதவி ஆணையர்கள் மற்றும் தக்கார் கருணாநிதி, கைலாசமூர்த்தி, செயல் அலுவலர் லோகநாதன், அறங்காவலர் குழு உறுப்பினர் கவிதா, கோவை முன்னாள் மேயர் செ.ம.வேலுச்சாமி, எம்எல்ஏக்கள் ஏ.கே.செல்வராஜ், அமுல்கந்தசாமி, முன்னாள் எம்எல்ஏ அருண்குமார், திமுக ஒன்றிய செயலாளர் எஸ்.எம்.டி.கல்யாணசுந்தரம், காரமடை நகர்மன்ற தலைவர் உஷா வெங்கடேஷ், திமுக நகர செயலாளர் வெங்கடேஷ், நகராட்சி ஆணையர் பால்ராஜ் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர்.

அப்போது தாசர்களின் சங்கு, சேகண்டி முழங்க பக்தர்களின் கோவிந்தா, கோவிந்தா கோஷம் விண்ணை பிளந்தது. பக்தர்கள் தங்களது நிலத்தில் விளைந்த நெல், வேர்க்கடலை, வாழைப்பழங்கள், சுண்டல், கொள்ளு உள்ளிட்டவற்றை திருத்தேரின் மீது வீசி எறிந்து விவசாயம் செழிக்க அரங்கனை மனமுருக வேண்டினர். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக கட்டுப்பாடுகளுடன் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில் இந்த ஆண்டு கட்டுப்பாடு தளர்த்தப்பட்டதால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரோட்டத்தில் கலந்து கொண்டனர்.

பின்னர், தேர் நான்கு ரத வீதிகளின் வழியாக வலம் வந்து இறுதியாக நிலையை வந்தடைந்தது. பக்தர்களின் பாதுகாப்பிற்காக கோவை மாவட்ட எஸ்பி பத்ரிநாராயணன் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், திருத்தேர் வலம் வரும் 4 ரத வீதிகளிலும் நூற்றுக்கும் மேற்பட்ட சிசிடிவி கேமிரா பொருத்தப்பட்டு காவல் துறையினர் தீவிரமாக கண்காணித்தனர்.

தேரோட்டத்தையொட்டி பாதுகாப்பு பணியில் எஸ்பி பத்ரி நாராயணன் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் ஈடுபட்டனர். மேலும்  தீயணைப்பு நிலைய அலுவலர் பாலசுந்தரம் தலைமையில் வீரர்களும், மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் மாலதி தலைமையில் வருவாய்த்துறையினரும் மற்றும் சுகாதாரத்துறையினரும், அறநிலையத்துறை ஊழியர்களும், ஊர்க்காவல் படையினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டனர். பக்தர்களின் வசதிக்காக கோயில் வளாகத்தில் ஆங்காங்கே எல்இடி திரை பொருத்தப்பட்டு, தேரோட்டம் நேரலையாக பக்தர்களுக்கு காண்பிக்கப்பட்டது.

Related Stories: