நிலம் அபகரிப்பு விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயி தீக்குளிக்க முயற்சி-போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை

விழுப்புரம் : நிலம் அபகரித்தவர்கள் மீது நடவடிக்கை கோரி ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று வாராந்திர பொதுமக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டம் நடந்தது. மனு அளிப்பதற்காக ஏராளமான பொதுமக்கள் வந்து சென்றனர். இதனிடையே மனு அளிக்க வந்த ஒருவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார், அவரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அதில் திருவெண்ணெய்நல்லூர் அருகே தென்மங்கலம் கிராமத்தை சேர்ந்த விவசாயியான சங்கர் (41) என்பது தெரியவந்தது.

தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து அவர் கூறுகையில், எனக்கு சொந்தமாக தென்மங்கலத்தில் 53 சென்ட் நிலம் உள்ளது. அந்த நிலத்தை தனிநபர்கள் 3 பேர் சேர்ந்து கடந்த 2 ஆண்டுகளாக அபகரித்துக்கொண்டு என்னை பயிர் செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர்.

இதுபற்றி பலமுறை போலீசில் புகார் செய்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே அவர்கள் 3 பேர் மீதும் உரிய நடவடிக்கை எடுத்து எனது நிலத்தை மீட்டுத்தர வேண்டும் என்றார். இதை கேட்டறிந்த போலீசார், இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாகவும், இதுபோன்று தற்கொலை முயற்சியில் ஈடுபடக்கூடாதென்றும் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். இதனால் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: