விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்து மூன்று அறைகள் தரைமட்டம்-2 பேர் படுகாயம்

விருதுநகர் : விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டு 3 அறைகள் தரைமட்டமாகின. 2 பேர் படுகாயமடைந்து தீவிர சிகிச்சையில் உள்ளனர்.விருதுநகர் அருகே கோட்டநத்தத்தில் ரமேஷ் (45) என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. நாக்பூர் உரிமம் பெற்ற இந்த ஆலையில் 15க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன. பேன்ஸி ரகவெடிகள் தயாரிக்கப்படுகின்றன. நேற்று காலை வேலைக்கு வந்த தொழிலாளர்கள் பட்டாசுக்கு தேவையான கருந்திரி தயாரிக்கும் பணியை துவக்கினர். அப்போது திரியில் உராய்வு ஏற்பட்டு திடீரென தீப்பற்றியது. தீ பிடித்ததில் வெடி விபத்து ஏற்பட்டு 3 அறைகள் தரைமட்டமாகின.

திரி தயாரிப்பு அறையில் இருந்த சேடபட்டியை சேர்ந்த முத்துப்பாண்டி (42), கட்டனூரை சேர்ந்த கருப்பசாமி (60) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்த விருதுநகர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். காயமடைந்த இருவரும் விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு பிறகு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு 2 பேருக்கும் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. பட்டாசு ஆலையில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய தவறிய ஆலை உரிமையாளர் ரமேஷ், போர்மென் சுப்புராஜ் ஆகியோர் மீது வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: