×

கோடை காலம் நெருங்குவதால் மண் பானை தயாரிப்பு மானாமதுரையில் தீவிரம்

மானாமதுரை : கோடை வெயில் தொடங்கிய நிலையில், மானாமதுரையில் மண் பானைகள், கூஜா வகைகள் தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பகுதி மண்பாண்ட கலைப்பொருள்களுக்கு பெயர் பெற்றது. இங்கு தயாரிக்கப்படும் மண்பாண்ட பொருட்களுக்கு வெளிநாடுகளிலும் வரவேற்பு உள்ளது. இதற்கு காரணம் மானாமதுரை பகுதி கண்மாய்களில் கிடைக்கும் 7 வகையான மண்ணின் தனித்தன்மைதான்.

மானாமதுரை நகரில் குலாலர் தெரு, உடைகுளம், கீழப்பசலை, சன்னதி புதுக்குளம் மற்றும் சுற்றியுள்ள சில கிராமங்களில் மண்பாண்ட பொருட்கள் தயாரிப்பது பிரதான தொழிலாக உள்ளது. இங்கு சீசனுக்கு தகுந்தவாறு விநாயகர் சிலைகள், அக்னிச்சட்டிகள், கார்த்திகை விளக்குகள், வரவேற்பறையை அலங்கரிக்கும் கலைப்பொருள்கள், விதவிதமான அடுப்புகள், பூந்தொட்டிகள், சமையல் சட்டிகள், மண்பானைகள், கூஜாக்கள் என பல வகையான மண்பாண்டப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.

கோடை காலம் தொடங்கியதும் மண் பானை தயாரிப்பு தீவிரமடையும். நவீன காலத்துக்கு ஏற்ப மண் பானைகள் பல டிசைன்களில் தயாரிக்கப்படுகின்றன. மேலும், மண் கூஜாக்களுக்கும் அதிக வரவேற்பு உள்ளது. குளிர்சாதனப் பெட்டிகளில் வைக்கப்படும் குடிநீரை விட மண் பானைகளில் குளிர்விக்கப்பட்ட குடிநீர் ஆரோக்கியமானது. பானையில் உள்ள குடிநீர் மண் வாசனையுடன் தனிச்சுவையாக தொண்டையை குளிரச் செய்து, புத்துணர்ச்சி தருவதை உணர முடியும். நடுத்தர மற்றும் பணக்காரர்கள் வரை பரவலாக மண் பானைத் தண்ணீரை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இதனால் இந்த ஆண்டு மண் பானைகள் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கு தொழிலாளர்கள் நேரடியாகவும், வியாபாரிகள் மூலமும், மண்பாண்ட கூட்டுறவு சங்கத்தில் கொடுத்தும் மண் பானைகளை விற்பனை செய்கின்றனர்.திருச்சி, புதுக்கோட்டை, விருதுநகர், மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் வியாபாரிகள் மானாமதுரை வந்து தொழிலாளர்களிடம் ஆர்டர் கொடுத்து மண் பானைகள், கூஜாக்களை வாங்கிச் செல்கின்றனர். தற்போது மானாமதுரையில் மண்பானை, கூஜாக்கள் ரூ.80ல் இருந்து ரூ.150 வரை விற்பனை செய்யப்படுகிறது.

மண்பாண்ட தொழிலாளர்கள் கூறுகையில், ‘‘மண் பானை தண்ணீரை அருந்துவதால் ஜலதோஷம், காய்ச்சல் வராது. எனவே குழந்தைகளும் குடிக்கலாம். தற்போது கண்மாய்களில் மண் எடுக்க தடை, டீசல் விலை உயர்வால் வாகனங்களின் வாடகை உயர்வு மற்றும் தேங்காய் மட்டை, விறகு என எரிபொருட்களின் விலை அதிகரித்துள்ளன. இருப்பினும் கடந்த ஆண்டு விற்ற விலைக்கே மண் பானைகளை விற்பனை செய்கிறோம்’’ என்றனர்.

Tags : Manamadurai , Manamadurai: With the onset of summer heat, the work of making earthen pots and kuja varieties is going on briskly in Manamadurai.
× RELATED மானாமதுரை வீரஅழகர் கோயில் சித்திரை...