×

புலம்பெயர் தொழிலாளர்கள் கழுத்தறுத்துக் கொல்லப்பட்டதாக வதந்தி பரப்பிய பாஜக நிர்வாகியை மார்ச் 20 வரை கைது செய்ய டெல்லி நீதிமன்றம் தடை!!

டெல்லி:  புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றி வதந்தி பரப்பிய வழக்கில் பாஜக நிர்வாகி பிரசாந்த் உம்ராவ் தூத்துக்குடி உயர்நீதிமன்றத்தை நாட டெல்லி உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.இந்தி பேசியதற்காக 12 புலம்பெயர் தொழிலாளர்கள் கழுத்தறுத்துக் கொல்லப்பட்டதாக பாஜக செய்தி தொடர்பாளர் பிரசாந்த் உம்ராவ் வதந்தி பரப்பினார்.மேலும் 15 பீகார் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தூக்கில் இடப்பட்டதாகவும் வதந்தி பரப்பினார்.  வெவ்வேறு மாநிலங்களில் நடந்த வெவ்வேறு குற்ற சம்பவ வீடியோக்களை டிவிட்டரில் பகிர்ந்து வதந்தி பரப்பியிருந்தார். புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றி வதந்தி பரப்பியதாக உ.பி. பாஜக செய்தி தொடர்பாளர் மீது தமிழ்நாடு போலீஸ் வழக்குப் பதிவு செய்தது.

ஜாமீனில் வர முடியாத பிரிவுகளின் கீழ் பிரசாந்த் உம்ராவ் மீது தமிழ்நாடு போலீஸ் வழக்குப் பதிவு செய்தது. பாஜக செய்தி தொடர்பாளர் பிரசாந்த் உம்ராவை கைது செய்ய திருச்செந்தூர் தனிப்படை போலீஸ் டெல்லி விரைந்துள்ளது. இந்நிலையில் புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றி வதந்தி பரப்பிய வழக்கில் முன்ஜாமீன் கோரி பாஜக செய்தி தொடர்பாளர் பிரசாந்த் உம்ராவ் டெல்லி யர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவில், பொய் செய்திக்கு நான் பலிகடா ஆகிவிட்டேன்.

வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு பரப்பவில்லை. பாஜகவை சேர்ந்தவர் என்பதால் அரசியல் நோக்கத்தோடு என் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. புலம்பெயர் தொழிலாளர்களின் நிலை தொடர்பாக தனது வேதனையை பகிர்ந்து கொள்வதற்காகவே டிவீட் செய்தேன். ஊடகங்கள், பிரபலங்கள் வெளியிட்ட செய்தியை பகிர்ந்தேன், அது போலியானது என தெரிந்ததும் நீக்கிவிட்டேன் இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வதந்தியை பரப்புவது தேச விரோத செயல் என்றும் வதந்தி பரப்பிய பாஜக நிர்வாகி இதுவரை மன்னிப்பு கூட கேட்கவில்லை என்றும் தமிழக அரசு குற்றம் சாட்டியது. பிரசாந்த் உம்ராவை மார்ச் 20ம் தேதி வரை கைது செய்யக் கூடாது என்று உத்தரவிட்டது. அதே சமயம் பிரசாந்த் உம்ராவ் தூத்துக்குடி நீதிமன்றத்தை நாடவும் டெல்லி உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.


Tags : Delhi ,Bajaka , Diaspora, workers, rumor, BJP, Delhi court
× RELATED எஸ்ஐஆர் கணக்கெடுப்பு விவகாரம்; 82 வயது...