×

ரூ.10 லட்சத்தை கொடுக்காமல் ஏமாற்றியதால் ஆத்திரம் பைனான்ஸ் அதிபரை கடத்தி சித்ரவதை செய்து படுகொலை: 4 பேர் கைது

சேந்தமங்கலம்: நாமக்கல் அருகே பைனான்ஸ் அதிபரை குண்டுக்கட்டாக காரில் கடத்திச்சென்று கொல்லிமலை லாட்ஜில் அடைத்து வைத்து அடித்துக்கொலை செய்தனர். நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே தண்ணீர்பந்தல் குமரிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (45). வட்டிக்கு பணம் கொடுத்து வசூலித்து வந்ததுடன் அறக்கட்டளையும் நடத்தி வந்துள்ளார். இதற்காக பலரிடம் நன்கொடை வாங்கி உள்ளார். மேலும்,  நாமக்கல் அருகே பண்ணக்காரன் பட்டியைச் சேர்ந்த பைனான்சியரான நாகராஜிடம்(36)  8 வாரங்களில் இரட்டிப்பு பணம் தருவதாகக் கூறி ரூ.10 லட்சம் வாங்கி உள்ளார். அதுபோக, கார் வாங்குவதற்காகவும் பணம் பெற்றுள்ளார். ஆனால், பணத்தை  திருப்பிக் கொடுக்கவில்லை. கேட்டபோது இழுத்தடித்துள்ளார். இதனால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம் கடன் பிரச்னை தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு வருமாறு நாகராஜ் தரப்பினர் அழைத்துள்ளனர். அதன்படி சரவணன் நாமக்கல்லுக்கு சென்றுள்ளார். அங்கு, பேச்சுவார்த்தை நடந்தபோது தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர், நாகராஜ் மற்றும் அவரது நண்பர்களான காவேட்டிப்பட்டியைச் சேர்ந்த பைனான்சியரான வினோத்(37), நாமக்கல் மேட்டுத்தெரு ஜோசப்(22), கவின்குமார் (22) ஆகியோர் சரவணனை குண்டுக்கட்டாக காரில் ஏற்றி கடத்திச்சென்றனர்.  கொல்லிமலை செம்மேடு பகுதியில், லேம்ப் கூட்டுறவு சங்கம் அருகில் உள்ள தனியார் விடுதிக்கு கொண்டு சென்று அறையில் அடைத்து வைத்து அடித்து துன்புறுத்தியுள்ளனர்.

அப்போது, கழுத்தில் காலால் மிதித்து பணத்தை திருப்பிக் கொடுக்குமாறு கேட்டுள்ளனர். தொடர்ந்து சரமாரி தாக்கியதால் சரவணன் உயிரிழந்தார். இதனால், அதிர்ச்சியடைந்த கும்பல்  உடலை விடுதியிலேயே போட்டுவிட்டு நள்ளிரவில் காரில் தப்பிச்சென்றனர். இதுபற்றி விடுதி ஊழியர்கள்  தகவலின்பேரில்,  வாழவந்திநாடு போலீசார்  வழக்கு பதிந்து விசாரித்தனர். குற்றவாளிகளை பிடிக்க டிஎஸ்பி சுரேஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. காரவள்ளி சோதனைச்சாவடி அருகே நேற்று நண்பகல் வந்த ஒரு காரை போலீசார் மடக்கி பிடித்தனர். அதில், நாகராஜ் உள்பட 4 பேரும் இருந்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். கொலை செய்யப்பட்ட சரவணனுக்கு சத்யா என்ற மனைவி மற்றும் இரு மகன்கள் உள்ளனர்.

Tags : Rage ,Binance ,Chancellor , Rage, finance magnate, tortured and murdered
× RELATED கன்னியாகுமரியில் கடல் சீற்றத்துக்கான...