×

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைப்போம் வடமாநில தொழிலாளர்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை: கோவையில் ஆய்வுக்கு பின் பீகார் குழு அதிகாரி பேட்டி

கோவை: கோவையில் ஆய்வு நடத்திய பீகார் மாநில ஊரக வளர்ச்சி உள்ளாட்சி செயலாளர் பால முருகன், ‘வட மாநில தொழிலாளர்கள் இங்கு நலமுடன் உள்ளனர், அவர்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை, இதுபற்றி பீகார் ஊடகங்களுக்கு தெரிவிப்போம்’ என்று கூறினார். கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கிராந்திகுமார் பாடி தலைமையில் வடமாநில தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பாக ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. பீகார் மாநில ஊரக வளர்ச்சி உள்ளாட்சி செயலாளர் பாலமுருகன், தொழிலாளர் ஆணையர் அலோக்குமார், சிறப்பு பணி படை வீரர் சூப்பிரண்டு சந்தோஷ்குமார், நுண்ணறிவு பிரிவு ஐஜி கண்ணன் ஆகியோர் அடங்கிய குழுவினர் மற்றும் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், எஸ்பி பத்ரி நாராயணன் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் தொழில் நிறுவனங்களை சார்ந்தவர்களும்  கலந்துரையாடினார்கள். பின்னர் பீகார் மாநில ஊரக வளர்ச்சி உள்ளாட்சி செயலாளர் பாலமுருகன் அளித்த பேட்டி:
கோவையில் உள்ள தொழில் நிறுவனங்களில் வடமாநில தொழிலாளர்கள் நலமுடன் உள்ளனர். அவர்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. தொழில் நிறுவன உரிமையாளர்கள் அவர்களை பாதுகாப்புடன் வைத்துள்ளனர். மாவட்ட நிர்வாகம், போலீஸ் துறையுடன் இணைந்து சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளனர்.   எங்களது ஆய்வு திருப்திகரமாக இருந்தது.
தமிழக அரசு மிகுந்த ஒத்துழைப்பு வழங்கியது. நாங்கள் பீகார் சென்றதும் எங்களது ஆய்வு அறிக்கைகளை ஊடகங்களுக்கு தெரிவிப்போம். இதன்மூலம் தொழிலாளர்களின் பெற்றோர் விழிப்புணர்வு அடைவார்கள். வதந்திகளை அவர்கள் நம்பமாட்டார்கள்.

 இங்குள்ள தொழில் நிறுவனத்தினர், வடமாநில தொழிலாளர்களை நன்றாக உள்ள நிலை பற்றி பேச வைத்து  நண்பர்களின் வாட்ஸ் அப்பிற்கு அந்த வீடியோக்களை அனுப்ப வேண்டும். அப்போது வதந்திகளுக்கு முழு முற்றுப் புள்ளி வைக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

பனியன் நிறுவனங்களில் ஜார்க்கண்ட் அதிகாரிகள் குழு ஆய்வு
ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து புலனாய்வுத்துறை டிஐஜி தமிழ்வாணன் மற்றும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஷம்ஷத் ஷம்சி, தொழிலாளர் நலத்துறை இயக்குநர் ராகேஷ் பிரசாத், ஜார்க்கண்ட் மாநில புலம்பெயர் தொழிலாளர் கட்டுப்பாட்டு அறை பிரதிநிதிகள், ஆகாஷ்குமார் மற்றும் சிகா லக்ரா உள்ளிட்ட 8 பேர் நேற்று திடீரென திருப்பூர் மாவட்டத்திற்கு வந்து வெள்ளகோவில் அருகே உள்ள தனியார் நூற்பாலை மற்றும் நொச்சிபாளையம், உடுமலை, வீரபாண்டி, பல்லடம் உள்ளிட்ட பகுதியில் உள்ள பனியன் நிறுவனங்களில் வேலை செய்யும் ஜார்கண்ட் மாநில தொழிலாளர்களிடம் பேசினர்.

மேலும், அங்கு தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வசதிகள் குறித்தும் கேட்டு தெரிந்துகொண்டனர். தொழிலாளர்கள் பதிலை வீடியோவாகவும் அதிகாரிகள் குழுவினர் பதிவு செய்தனர். இதன் பின்னர் மதியம் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்திற்கு ஜார்க்கண்ட் மாநில குழுவினர் சென்று கலெக்டர் வீனித் மற்றும் போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினவு மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

Tags : Bihar ,Coimbatore , An end to rumours, North State workers, inspection in Coimbatore, Bihar team official interviewed
× RELATED இது தகவல்கள் எளிதாக கிடைக்கும் காலம்:...