×

அதிகரித்து வரும் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை: போக்சோ குற்றங்கள் நடக்காமல் தடுக்க பெற்றோர் செய்ய வேண்டியது என்ன?

தாம்பரம்: வடமாநிலங்களான ஆந்திரா, உத்தரப்பிரதேசம், தெலங்கானா, ஹரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட பகுதிகளில் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருவது போல், தற்போது தமிழ்நாட்டிலும் பல இடங்களில் குழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் குறிப்பாக பள்ளி மாணவிகள், வீட்டில் தனியாக இருக்கும் பெண் குழந்தைகள் என பெரும்பாலானோர் பாலியல் வன்கொடுமையால் ஏதாவது ஒரு பகுதியில் நாள்தோறும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். பெண்கள் நம் நாட்டின் கண்கள் என சொல்லி வரும் நிலையில், சிறுவயதிலேயே அவர்கள் வாழ்க்கையை சிலர் சீரழிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இது போன்ற குழந்தைகள் பாலியல் வன்கொடுமைகளுக்கு தீர்வு காணும் வகையில் கடந்த 2012ம் ஆண்டு போக்சோ சட்டம் கொண்டுவரப்பட்டது.

இந்த சட்டம் மூலம் குழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்யும் நபர்கள் சட்டத்தின் மூலம் தண்டிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால், பெரும்பாலானோர் தங்கள் குழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமைகள் நடைபெற்றால் அது குறித்து புகார் அளிக்க முன் வருவதில்லை. காரணம் அவ்வாறு புகார் அளிக்கும்போது சுற்றி இருப்பவர்கள் தங்களது குழந்தையையும், தங்களது குடும்பத்தை பற்றியும் தவறாக பேசுவார்களோ, உறவினர்கள் தள்ளி வைத்து விடுவார்களோ, குழந்தை பள்ளிக்குச் சென்றால் அங்கு குழந்தைக்கு ஏதாவது பிரச்னை வருமோ போன்ற அச்சத்தினால் பெரும்பாலான சம்பவங்கள் மூடி மறைக்கப்படுகிறது. இவ்வாறு மறைக்கப்படுவதினால் குற்றம் செய்யும் நபர்கள் எந்த ஒரு அச்சமும் இன்றி சுதந்திரமாக வெளியே சுற்றித் திரிகின்றனர்.

இவ்வாறு ஒரு நபர் தவறு செய்யும் போது சம்பந்தப்பட்ட குழந்தையின் பெற்றோர்கள் சம்பவம் குறித்து புகார் எதுவும் அளிக்கப்படவில்லை என தெரியும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நபர் தைரியமாக மீண்டும் மீண்டும் இது போன்ற குற்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றார். பெரும்பாலான இடங்களில் குழந்தைகளுக்கு நடைபெறும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து பெற்றோர்களிடம் தெரிவித்தால் தங்களை பள்ளிக்கு அனுப்புவார்களா, நண்பர்களுடன் விளையாடச் செல்ல அனுமதிப்பார்களா, நண்பர்கள் வீட்டுக்கு அனுப்புவார்களா என அஞ்சும் குழந்தைகள், தங்களுக்கு ஏற்படும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து அவர்களது பெற்றோர்களிடம் தெரிவிக்காமலேயே இருந்து விடுகின்றனர்.

பின்னர் குழந்தைகளின் நடவடிக்கைகள், உடல் சோர்வுகள் குறித்து தெரிய வந்து பெற்றோர்கள் குழந்தைகளிடம் விசாரிக்கும் போது தான் உண்மைகள் தெரிய வருகிறது. தற்போதைய காலகட்டத்தில் நமக்கு ஒரு உதவி என்றால் யாரும் வந்து நமக்காக போராடப் போவதில்லை நாம்தான் நமக்காக போராட வேண்டும். இதற்கு முதலில் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் உள்ள இடைவெளியை குறைக்க வேண்டும். அதற்கு அவர்களுடன் அதிகமாக தங்களது நேரத்தை செலவிட வேண்டும். நல்லது எது, தீயது எது என புரிய வைத்து நாளை அவர்களுக்கு ஏதேனும் பிரச்னைகள் நேர்ந்தால் அதனை துணிச்சலுடன் வந்து பெற்றோர்களிடம் கூறும் அளவிற்கு தயார் படுத்த வேண்டும். இவ்வாறு தயார் செய்யப்படும் பட்சத்தில் குழந்தைகள் தங்களுக்கு எந்த ஒரு பிரச்னை இருந்தாலும் அதனை உடனடியாக பெற்றோர்களிடம் தெரிவிக்கும் நிலை ஏற்படும்.

குழந்தைகளுக்கும் நமக்காக நமது பெற்றோர்கள் துணை இருக்கிறார்கள். நம்மை யாரும் எதுவும் செய்ய முடியாது என்ற தைரியம் உண்டாகும். 18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு பாலியல் சீண்டல்கள் ஏதாவது நடைபெறுவதை நாம் கண்டால் உடனடியாக குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாதிக்கப்படுவது நமது குழந்தை இல்லையே என பார்த்தும் பார்க்காதது போல் செல்லக் கூடாது, தங்களின் குழந்தையை பத்திரமாக பார்த்துக்கொள்ள விரும்புவதுபோல, பக்கத்துவீட்டு குழந்தைக்கு ஏதும் தீங்கு ஏற்பட்டு விடக்கூடாது என்ற உணர்வு வந்தால் பெரியவர்கள் என்ற முறையில் முன்னின்று குற்றம் செய்பவர்களை தட்டிக் கேட்க முடியும். அவ்வாறு செய்யும்போது அது குழந்தைகளுக்கான பாதுகாப்பு வளையத்தை பெரிதாக்குவதோடு, குழந்தைகளுக்கு நம்பிக்கையும் உண்டாகும்.

அதேபோல குழந்தைகளை பாலியல் துன்புறுத்தலிருந்து தடுக்க குழந்தைகளுக்கு தொடுதல் குறித்து கற்றுத் தர வேண்டும். அதில் நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் ஆகியவற்றை கற்றுத் தர வேண்டும். ஒரு குழந்தையை காரணமின்றித் தொட வேண்டியதில்லை. உதாரணமாக கைகுலுக்கித்தான் பாராட்ட வேண்டும் என்பது இல்லை. கரவொலி எழுப்பித் தொடாமலேயே பாராட்ட முடியும்.  மேலும் குழந்தைகளின் நான்கு தனிப்பட்ட உறுப்புகளான முகம், மார்பு, பிறப்புறுப்பு மற்றும் பின்பக்கம் யாரும் தொடக் கூடாது என்பதைத் தெளிவாக அவர்களுக்குச் சொல்ல வேண்டும்.  அப்படி யாராவது முயற்சித்தால் நோ-கோ-டெல் (தொட வேண்டாம் என்று கத்த வேண்டும், உடனடியாக அந்த இடத்தை விட்டு அகல வேண்டும், பின்னர் நம்பிக்கையானவரிடம் சொல்லி உதவி பெற வேண்டும் என்ற வழிமுறையைப் பின்பற்றப் பயிற்சியளிக்க வேண்டும்.

குழந்தைகள் தவறாக நடக்க முயன்றவர் குறித்து அனைவரிடமும் சொல்லி அடையாளப்படுத்த பயிற்சி கொடுக்க வேண்டும். இவ்வாறு குழந்தைகளுக்கு நாம் பயிற்சி அளிப்பதன் மூலம் அவர்கள் பாலியல் வன்கொடுமைகளில் சிக்காமல் இருக்க உதவியாக இருக்கும். இது குறித்து பெற்றோர் சிலர் கூறுகையில், ‘‘பெண் குழந்தைகளிடம் பாலியல் துண்புறுத்தலில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். அது மரண தண்டனையாக இருந்தாலும் வரவேற்கத்தக்கது தான். சில இடங்களில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமைகளில் குழந்தைகள் உடல் ரீதியாக கடுமையான பாதிப்பை அடைந்துள்ளனர். அது போன்ற பாதிப்பு அவர்கள் வாழ்நாள் முழுவதும் அவர்களுக்குள் ஓடிக்கொண்டே இருக்கும். அதிலிருந்து அவர்களால் மீண்டு வரவே முடியாது. சிறு குழந்தை என்றும் பாராமல் பாலியல் குற்ற செயலில் ஈடுபட்டவர்கள் வேறு எந்த எல்லைக்கும் செல்ல தயங்க மாட்டார்கள்.

அப்படிப்பட்டவர்களை ஐந்தாண்டுகள், பத்தாண்டுகள், கடுங்காவல் தண்டனை என தண்டனை வழங்கினால் மற்றவர்களுக்கு இந்த குற்றம் குறித்து அச்சம் ஏற்படாது. இதுபோன்ற குற்ற செயலில் ஈடுபட்டால் தண்டனை மிகவும் கடுமையாக இருக்கும் என்று அச்சம் ஏற்படுகின்ற அளவிற்கு தண்டனை வழங்கினால் இது போன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபட நினைப்பவர்கள் கூட அதை செய்யாமல் இருப்பார்கள். எனவே இந்த வழக்கு தொடர்பான தண்டனை மிகவும் கடுமையாக இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர். இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில்,‘‘ஒரு குடும்பத்தில் ஏதாவது ஒரு குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை நடந்தால் அந்த விஷயத்தை பெரிய குற்றம்போல் சுட்டிக்காட்டி அந்த குடும்பத்தை புறக்கணிப்பது என்பது கொடுமையான ஒரு செயல்.

இதில் சிலர் பெற்றோர்கள் குழந்தைகளை ஒழுங்காக பார்த்துக் கொள்ளாததால் தான் இது போன்ற சம்பவம் நடைபெற்று உள்ளது என பெற்றோர்கள் மீது குற்றம் சுமத்துவது எல்லாம் எந்த விதத்தில் நியாயம் என தெரியவில்லை. இது போன்ற சம்பவங்களினால் பாதிக்கப்படும் குடும்பத்தினருக்கு ஆறுதலாக இருக்கிறோமோ இல்லையோ அவர்கள் வேதனையை மேலும் அதிகரிப்பவர்களாக இருக்கக் கூடாது. இது போன்ற சம்பவங்களினால் மனம் உடைந்து காணப்படும் பெற்றோர்களுக்கு உறுதுணையாக இருந்து சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்க அறிவுறுத்தினால் பெற்றோர்களுக்கும் சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுத்து மீண்டும் இதுபோல மற்றொரு குழந்தைக்கு நடைபெறாமல் இருக்க செய்ய துணிச்சலாக செயல்படுவார்கள்.

இது போன்ற பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் பலர் குழந்தைகளின் எதிர்காலம் என்னவாகுமோ என்ற பயத்தில் இத்தகைய வழக்குகளை கையில் எடுக்க வேண்டாம் என முடிவு செய்துவிடுகின்றனர். ஆனால் அது தவறு, துணிச்சலாக வழக்கை எதிர்கொண்டால்தான் குற்ற சம்பவங்கள் குறையும்,’’ என்றார். இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் பெரும்பாலும் அறிமுகமானவர்களாலேயே நடைபெறுகிறது. குறிப்பாக உறவினர்கள், பக்கத்து வீட்டுக்காரா்கள், பள்ளிக்கு அழைத்துச் செல்லும் ஆட்டோ, வேன் ஓட்டுநர்கள், பள்ளி மற்றும் டியூஷன் ஆசிரியர்கள், சில இடங்களில் தந்தையே குழந்தையிடம் தவறுதலாக நடப்பது உள்ளிட்ட சம்பவங்கள் நடக்கிறது. எனவே குழந்தைகளின் பெற்றோர்கள் இதில் விழிப்புணர்வாக இருக்க வேண்டும்.

யாராக இருந்தாலும் குழந்தைகளிடம் பழகும் போது ஒரு எல்லை வரை மட்டும்தான் அனுமதிக்க வேண்டும். அவ்வாறு எப்போதும் குழந்தைகள் மீது கவனம் செலுத்தி கண்காணிப்பிலேயே இருக்கும் போது குழந்தைகளை குற்ற சம்பவங்களில் சிக்காமல் பாதுகாத்துக் கொள்ள முடியும். இது போன்ற பாலியல் வன்கொடுமை வழக்குகளில் காவல்துறையினர் தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். தவறு செய்பவர்களுக்கு நிச்சயம் தண்டனை உண்டு எனவே இது போன்ற சம்பவங்கள் நடைபெற்றால் காவல்துறையில் உடனடியாக புகார் அளிக்க வேண்டும். அவ்வாறு புகார் அளிக்கும்பட்சத்தில் துரிதமாக நடவடிக்கை எடுக்க உதவியாக இருக்கும்,’’ என்றார்.

Tags : Child sexual violence on the rise: What can parents do to prevent POCSO crimes?
× RELATED தமிழக – ஆந்திர எல்லையான எளாவூரில்...