×

திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயிலில் கல்யாணசுந்தரர் திருக்கல்யாண உற்சவம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

திருவொற்றியூர்: திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயிலில் கல்யாணசுந்தரர் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். திருவொற்றியூரில் உள்ள தியாகராஜசுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோயில் மாசி பிரமோற்சவ விழா கடந்த மாதம் 26ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. உற்சவர் சந்திரசேகரர், சூரிய, சந்திர பிரபை, நாகம், சிம்மம், பூதம், அதிகார நந்தி, அஸ்தமானகிரி, புஷ்ப பல்லக்கு, குதிரை, இந்திர விமானம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் தினம்தோறும் எழுந்தருளி 4 மாட வீதியில் உலா வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கல்யாண சுந்தரர் திருக்கல்யாணம் நேற்று காலை நடைபெற்றது.

இதில் உற்சவர் கல்யாண சுந்தரர், திரிபுரசுந்தரி அம்மன் வசந்தமண்டபத்தில் எழுந்தருளினர். காலை 9.30 மணிக்கு தொடங்கிய திருமண வைபவத்தில் வேதமந்திரங்கள் முழங்க, கல்யாண சுந்தரருக்கு பூணூல் அணிவிப்பு, காப்பு கட்டுதல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து மங்கல வாத்தியங்கள் முழங்க கல்யாணசுந்தரர் திருக்கல்யாணம் நடைபெற்றது.
இதையடுத்து, பக்தர்களுக்கு இனிப்பும், திருமண விருந்தும் வழங்கப்பட்டது. பெண்கள் மஞ்சள், குங்குமம், தாலிக்கயிறு, இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதைத்தொடர்ந்து மதியம் 2 மணிக்கு 63 நாயன்மார்கள் மாடவீதி உற்சவம் நடைபெற்றது.

இரவு  கல்யாணசுந்தரருக்கும், சங்கிலி நாச்சியாருக்கும் குழந்தை ஈஸ்வரருக்கும் மகிழ மரத்தடியில் காட்சி தரும் மகிழடி சேவை நடைபெற்றது. விழாவில் கே.பி.சங்கர் எம்எல்ஏ, மண்டலக்குழு தலைவர் தி.மு.தனியரசு உள்பட சென்னையின் பல்வேறு பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையாளர் பாஸ்கரன் மற்றும் அதிகாரிகள் செய்து இருந்தனர். திருவொற்றியூர் காவல் உதவி கமிஷனர் முகமது நாசர், இன்ஸ்பெக்டர் காதர்மீரா ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags : Kallyanasundrar ,Thirukalyana ,Thiruvottriyur Shaudduyamman Temple , Kalyanasunderar Tirukalyana Utsavam at Tiruvottiyur Vadudayamman Temple: Thousands of Devotees Participate
× RELATED வெங்கடேஸ்வர சுவாமி திருக்கல்யாண வைபவம்