×

செம்மொழி பூங்காவையும், தோட்டக்கலை நிலத்தையும் இணைத்து உலகத்தரம் வாய்ந்த தாவரவியல் பூங்கா அமைக்க கலைஞர் திட்டமிட்டிருந்தார்: பி.வில்சன் எம்பி தகவல்

சென்னை: செம்மொழி பூங்காவையும் தோட்டக்கலை இடத்தையும் மேம்பாலம் மூலம் இணைத்து உலகத்தரம் வாய்ந்த தாவரவியல் பூங்காவை அமைக்க கலைஞர் திட்டமிட்டிருந்தார் என்று மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் எம்பி கூறினார். சென்னை அண்ணா மேம்பாலம் அருகே 1000 கோடி மதிப்புள்ள 110 கிரவுண்ட் நிலத்தை அரசு கையகப்படுத்தும் நடவடிக்கையை எதிர்த்த தோட்டக்கலை சங்கத்தின் மேல்முறையீட்டு வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதையடுத்து, வழக்கு தொடர்ந்த மனுதாரர்  வழக்கறிஞர் புவனேஷ் குமார் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் கூறியதாவது:
 அண்ணா மேம்பாலம் அருகே கதீட்ரல் சாலையில் அமைந்துள்ள செம்மொழி பூங்கா தனியார் வசமிருந்தது. அரசு நிலமான 310 கிரவுண்ட் இடம் திமுக ஆட்சியில்  கையகப்படுத்தப்பட்டு செம்மொழி பூங்கா அமைக்கப்பட்டது. அதற்கு நேர் எதிரில் உள்ள தோட்டக்கலை சங்கம் அனுபவித்து வந்த 110 கிரவுண்ட் நிலமும் அரசு நிலம்தான். இந்த இடத்தையும் கையகப்படுத்தி இரண்டு நிலங்களையும் பாலம் மூலம் இணைத்து உலகத்தரமான தாவரவியல் பூங்காவை அமைக்க கலைஞர் விரும்பினார்.

 தோட்டக்கலை சங்கம் வைத்திருந்த அரசு நிலத்தை அந்த சங்கத்திற்கே கொடுக்க அதிமுக ஆட்சியில் மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. இதை எதிர்த்து புவனேஷ்குமார் என்பவர் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில், அந்த நிலத்தை கையகப்படுத்துவது தொடர்பாக அரசு தோட்டக்கலை சங்கத்திற்கு நோட்டீஸ் அனுப்பியது.

அரசு  அனுப்பிய நோட்டீசை எதிர்த்து தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவை தனி நீதிபதி தள்ளுபடி செய்தார். இதை எதிர்த்து தோட்டக்கலை் சங்கம் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு, மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்துள்ளது. இது அரசுக்கு கிடைத்த வெற்றி. இந்த உத்தரவின் அடிப்படையில் அந்த நிலத்தை கையகப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : B. Wilson ,MB Info , Classical Park, Horticultural Land, World Class Botanic Gardens, P.Wilson MB Info
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்