உலக ஸ்குவாஷ், ஆசிய ஹாக்கி சென்னையில் நடத்த நடவடிக்கை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

மதுரை: சென்னையில் உலக ஸ்குவாஷ் மற்றும் ஆசிய ஹாக்கிப்போட்டிகளை நடத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். மதுரையில் லேடி டோக் கல்லூரியில், பேட்மின்டன் விளையாட்டில் சாதனை படைத்த மாற்றுத்திறன் மாணவி ஜெர்லின் அனிகா, ரேவதி வீரமணி, ரோஸி மீனா ஆகிய வீராங்கனைகளுக்கு பாராட்டு விழா நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: பொருளாதாரம் படிப்பதே பெரிய சாதனை. அத்துடன் விளையாட்டிலும் ஈடுபட்டு படிக்கவும் செய்வது மாணவிகளின் சாதனையாக கருதுகிறேன்.

அர்ஜூனா விருது பெறும் தமிழகத்தின் முதல் மாற்றுத்திறன் சாதனை மங்கை ஜெர்லின் அனிகா என்பது பெருமையளிக்கிறது. இந்த அரசு கல்விக்கு உள்ளது போல் விளையாட்டிற்கும் முக்கியத்துவம் அளித்து வருகிறது. பெற்றோர் குடும்பத்துடன் அமர்ந்து விளையாட்டு போட்டிகளை பார்க்கின்றனர். ஆனால் மாணவிகள் விளையாட செல்வதை அவர்கள் விரும்பவில்லை. கல்வியை போல் விளையாட்டிலும் சாதிக்க மாணவிகளையும் சுதந்திரமாக அனுமதிக்க வேண்டும். வீராங்கனை ஜெர்லின் அனிகா இறகு பந்து போட்டியில் சாதனை புரிந்துள்ளார். அவரது சாதனை கல்லூரிக்கு மட்டுமல்ல. தமிழ்நாட்டிற்கும் பெருமையளிக்கிறது.

அவரின் இந்த சாதனையை பாராட்டி தமிழ்நாடு அரசு அவருக்கு ரூ.79.5 லட்சம் ஊக்கத்தொகை அளித்துள்ளது. தமிழ்நாடு அரசு விளையாட்டிற்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் அளிக்கிறது என்பதற்கு இதுவே உதாரணம். அதுபோல முதலமைச்சர் கோப்பைக்கான 15 வகையான விளையாட்டு போட்டிகள் நடந்து வருகிறது. இதற்கு ரூ.25 கோடி மதிப்பிலான பரிசுத்தொகை அளிக்கப்படுகிறது.  வரும் ஜூனில் உலக கோப்பைக்கான ஸ்குவாஷ் போட்டியும், ஆசிய ஹாக்கி போட்டியும் சென்னையில் நடத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு  அவர் பேசினார்.

Related Stories: