×

குன்றத்தூர் அருகே பரபரப்பு தீ விபத்தில் 23 வீடுகள் எரிந்து நாசம்: 5க்கும் மேற்பட்ட பைக்குகள் கருகின

குன்றத்தூர்: குன்றத்தூர் அருகே திருமுடிவாக்கம் பகுதியில் மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் 23 வீடுகள் எரிந்து நாசமாகின. மேலும், 5க்கும் மேற்பட்ட பைக்குகள் கருகியது. குன்றத்தூர் அடுத்த திருமுடிவாக்கம், கலைஞர் நகர் பகுதியில் ஏராளமான குடிசை வீடுகள் உள்ளன. அவற்றில் தமிழ்நாடு மற்றும் வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் ஏராளமானோர் வசிக்கின்றனர். இவர்கள், அனைவரும் திருமுடிவாக்கம் சிப்காட்டில் உள்ள தொழிற்சாலைகளில் கூலி வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று ராஜாராம் என்பவரது வீட்டில் இருந்து திடீரென குபுகுபுவென கரும்புகை வந்து, திடீரென தீ கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. இதனால், ஏற்பட்ட வெப்பத்தில் வீட்டின் சமையல் அறையில் இருந்த சிலிண்டர் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியதால், அருகில் இருந்த மற்ற குடிசைகளின் மீதும் தீப்பொறி விழுந்தது.

இதில், அடுத்தடுத்து 23 வீடுகளுக்கும் தீ பரவியதால், வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்து ஓடினர். அப்பகுதி பொதுமக்கள் தீயை அணைக்க முயன்றபோதும், தீ கட்டுக்கடங்காமல் பரவியது. இது குறித்து உடனடியாக தாம்பரம் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.தகவல் அறிந்ததும் தாம்பரம், மேடவாக்கம் ஆகிய பகுதிகளில் இருந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, தண்ணீர் பட்டதும் எரிந்து கொண்டிருந்த ஒரு வீட்டில் இருந்து மற்றொரு சிலிண்டரும் வெடித்து சிதறியது. இதனால், அப்பகுதியே போர்க்களம் போல் காட்சியளித்தது. சுமார் 2 மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். அதற்குள் 23 வீடுகளும் தீயில் எரிந்து முற்றிலும்  நாசமானது.

மேலும், வீட்டின் முன்நிறுத்தி வைத்திருந்த, சுமார் 5க்கும் மேற்பட்ட பைக்குகள் மற்றும் வீட்டில் இருந்த டிவி, பிரிட்ஜ், கட்டில், மெத்தை, பீரோ, பாத்திரங்கள் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்கள் அனைத்து தீயில் எரிந்து நாசமானது. இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதங்கள் ஏற்படுவது தவிர்க்கப்பட்டது. மேலும், அப்பகுதி எங்கும் புகை மூட்டமாக காணப்பட்டது. இது குறித்து குன்றத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. ஒரே நேரத்தில் 23 வீடுகள் அடுத்தடுத்து தீயில் எரிந்த சம்பவம் திருமுடிவாக்கம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

* பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்
தீ விபத்து குறித்து, கேள்விப்பட்ட  தமிழ்நாடு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர்  தா.மோ.அன்பரசன், ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை ஆகியோர் சம்பவ  இடத்திற்கு சென்று, தீ விபத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு,  பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறிகள், வேட்டி, சேலை,  போர்வை உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினர். மேலும், வீடுகளை இழந்தவர்கள்  அருகில் உள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கவும், அவர்களுக்கு புதிய  வீடுகள் கட்டுவதற்கு நிதி தரப்படும் என்று அரசு சார்பில்  தெரிவிக்கப்பட்டது.


Tags : Kuntharthur , 23 houses gutted in wildfire near Kunradhur: More than 5 bikes burnt
× RELATED குன்றத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி வெட்டிக் கொலை