×

ஆயிரமாண்டு அழுக்கை ஒரு நூற்றாண்டில் துடைத்துவிட முடியாது சமூகநீதி போராட்டம் தொடரும்: தோள்சீலை போராட்டத்தின் 200வது ஆண்டு நிறைவு பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

நாகர்கோவில்: ‘ஆயிரமாண்டு அழுக்கை ஒரு நூற்றாண்டில் துடைத்துவிட முடியாது. இதற்கான சமூகநீதி போராட்டத்தை தொடர்வோம்’ என்று நாகர்கோவிலில் நடந்த தோள்சீலை போராட்டத்தின் 200வது ஆண்டு நிறைவு பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். நாகர்கோவிலில் தோள்சீலை போராட்ட 200வது ஆண்டு நிறைவு பொதுக்கூட்டம், மாநகராட்சி புதிய அலுவலக கட்டிடம் திறப்பு, கலைஞர் முழு உருவ வெண்கலச் சிலை திறப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், நேற்று இரவு குமரி மாவட்டம் வந்தார். சனாதன சாதி பாகுபாட்டிற்கு எதிராக நடைபெற்ற தோள் சீலை போராட்டத்தின் 200வது ஆண்டு நிறைவு பொதுக்கூட்டம் நாகர்கோவில் நாகராஜா திடலில் நேற்று நடந்தது.

இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
தமிழ்நாட்டின் சமூக நீதி வரலாற்றில் வீரமிகுந்த போராட்டங்களில் ஒன்றாக பதிவாகியுள்ள தோள் சீலை போராட்டத்தின் 200வது ஆண்டு விழாவில் நான் பங்கெடுப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். எத்தகைய இழிநிலை இந்த நாட்டில் 200 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது என்பதையும், வீரமிக்க போராட்டம் காரணமாக அந்த இழிநிலை அடித்து நொறுக்கப்பட்டது என்பதையும், இன்றைய இளைய தலைமுறையினருக்கு உணர்த்த இந்த பொதுக்கூட்டம் நடத்தப்படுகிறது, நடத்தப்பட வேண்டும். கல்வியில், வேலைவாய்ப்பில், பொருளாதாரத்தில், நாகரிகத்தில் தமிழ்நாடு எவ்வளவு உயரங்களை தொட்டுவிட்டது. இப்படிப்பட்ட உயரத்தில்தான் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்தோமா என்றால் இல்லை. இப்படிப்பட்ட உயரத்தில் 100 ஆண்டுக்கு முன்பு இருந்தோமா என்றால் இல்லை. ஒரு காலத்தில் அனைத்து உணவு விடுதிக்கும் அனைவரும்போக முடியாது. பஞ்சமர்கள், குஷ்ட ரோகிகள் வர முடியாது, நாடக கொட்டடைக்கு செல்ல முடியாது.

ரயில் நிலையங்களில் உயர் சாதியினர் சாப்பிட இடம் இருந்தது. ரயில்விட்டபோது உயர்சாதியினருக்கு தனித்தனி பெட்டிகள் ஒதுக்க சிலர் கோரிக்கை வைத்தனர். 80 வயது கடந்தவர்களிடம் கேட்டுப்பாருங்கள், தமிழ் சமுதாயத்தில் ஒரு நூற்றாண்டு காலமாக நடந்த மாற்றங்கள் தெரியும். எப்படி இருந்த நாம் இப்படி உயர்ந்துள்ளோம் என்பது தெரியும். அப்படிப்பட்ட கால மாற்றத்தை உணர்த்துகிற விழாவாக இந்த தோள் சீலை போராட்ட 200வது ஆண்டுவிழா அமைந்துள்ளது. கல்தோன்றி மண்தோன்றா காலத்தின் முன்பு வாளோடு தோன்றிய சமூகம் பண்பாட்டால் செழித்து நின்றதை யாரும் மறுக்க முடியாது. நேற்று கீழடியில் அருங்காட்சியகத்தை திறந்து வைத்தேன். ஆற்றங்கரை நாகரிகத்தில் வைகை நாகரிகம் எடுத்துக்காட்டாக திகழ்ந்த இடம் கீழடி.

ஆடை அணிந்து வாழ்ந்தது மட்டுமின்றி அணிகலன்கள் அணிந்து வாழ்ந்த இனம் தமிழ் இனம். அதனைத்தான் நமக்கு கீழடி காட்டுகிறது. ஆனால் இடைக்காலத்தில் எடுத்த பண்பாட்டு படையெடுப்பால் தமிழ் இன பண்பாடு சிதைக்கப்பட்டது. மதத்தின் பெயரால், சாதியின் பெயரால், சாஸ்திர சம்பிரதாயத்தின் பெயரால், புராணத்தின் பெயரால் மனிதனை பாகுபடுத்திவிட்டார்கள். சூத்திரர்களையும் பெண்களையும் இழிவான பிறவிகளாக ஆக்கியது மனு. ஆணுக்கு பெண் அடிமை என்றாக்கிவிட்டார்கள். தீண்டாமையை புனிதம் ஆக்கினர்.

மனிதனை மனிதன் தொடக்கூடாது, படிக்க கூடாது என்று ஆக்கினர். பெண்கள் வீட்டில் முடக்கப்பட்டனர். அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்று ஆக்கினார்கள். இதற்கு எதிராக அருள்பிரகாச வள்ளலாரும், வைகுண்டரும், அயோத்திதாசரும், பெரியாரும் நடத்திய சீர்திருத்த இயக்கங்கள் தமிழ்நாட்டை தலைநிமிர வைத்துள்ளது. பக்தி வேறு, பாகுபாடு வேறு என்று உணர்த்தினர். மற்ற இடங்களை விட இங்கு தீண்டாமை தலைவிரித்தாடியது. ஒடுக்கப்பட்ட மக்கள் குடை எடுத்து செல்லக்கூடாது, செருப்பு அணிய கூடாது, பசு வளர்க்க கூடாது, ஒரு மாடிக்கு மேல் வீடு கட்ட கூடாது. முரட்டு துணி அணிய வேண்டும் என்று இருந்தது. ஒடுக்கப்பட்ட பெண்கள் அனுபவித்த துன்பங்கள் வேறு எங்கும் இல்லாதது. குறிப்பிட்ட சமூக பெண்கள் மாரில் சேலை கூடாது என்ற இழிநிலை வேறு எங்கும் இல்லை. சேலை அணிந்த பெண்கள் தாக்கப்பட்டார்கள், சித்ரவதை செய்யப்பட்டார்கள்.

1822ம் ஆண்டு போராட்டம் தொடங்கி 50 ஆண்டுகாலம் போராட்டங்கள் நடந்தது. போராட்டத்திற்கு சீர்திருத்த கிறிஸ்தவர்கள் துணை நின்றனர், அய்யா வழி வைகுண்டர் துணை நின்றார். திறந்த மார்புடன் பெண்கள் இருக்க கூடாது என்று வைகுண்டர் பரப்புரை செய்தார். அவர் பொதுக்கிணறுகள் உருவாக்கினார். அனைத்து துன்பங்கள் ஒழியும் என்று கூறி அன்புக்கொடி என்ற மதப்பிரிவை உருவாக்கினார். மக்களுக்கு தலைப்பாகை கட்டிவிட்டார். பெண்கள் இடுப்பில் தண்ணீர் குடம் கொண்டுவர கட்டளையிட்டார். தாழக்கிடப்போரை தற்காப்பதே தர்மம் என்றார் அவர். அதன் விளைாக 1859ம் ஆண்டு உத்திரம் திருநாள் தோள் மன்னர் தோள் சீலை அணிய உத்தரவிட்டார். போராட்டத்திற்கு துணை நின்ற அய்யா வைகுண்டர், மீட், கர்னல் மன்றோ, ரிங்கில் தவுபே நம் அனைவராலும் வணங்க தக்கவர்கள். இப்படி எத்தனை படிகள் தாண்டி நாம் உயரம் பெற்றுள்ளோம்.

பிரிட்டீசார் சமூக ரீதியாக பல்வேறு சட்டங்களை உருவாக்கி கொடுத்ததை மறுக்க முடியாது. மனிதர்களை அடிமையாக விற்க தடை, உடன் கட்டை ஏறுதல் ஒழிப்பு, அனைத்து சாதியினரும் ஓடு வேய்ந்த வீடு கட்டுதல், நரபலிக்கு தடை, சட்டம் அனைவருக்கும் பொது, அனைவருக்கும் கல்வி, விதவைகள் மறுமணம் செய்யலாம், சிறுமி திருமணம் தடை என்பது போன்ற சமூக சீர்திருத்தங்கள் பிரிட்டீஷ் ஆட்சி காலத்தில் செய்யப்பட்டது. நீதிகட்சி ஆட்சி இதனை முழுமையாக செய்து காட்டியது. அனைவருக்கும் கல்வி என்பதை கட்டாயமாக்க நீதிகட்சி ஆட்சி ஒரு அரசாணை வெளியிட்டது. எந்த சமூகம் சார்ந்தவராக இருந்தாலும் பாகுபாடு பார்த்து கல்வி சாலைக்குள் அனுப்பினால் கல்வி நிறுவன அனுமதி ரத்து செய்யப்பட்டது.

நாட்டில் முன்னோடியாக பெண்களுக்கு வாக்குரிமை தரப்பட்டது. பஞ்சமர் என்பது நீக்கி ஆதி திராவிடர் என அரசாணை போடப்பட்டது. சாணார் நீக்கி நாடார் என்று அரசாணை போடப்பட்டது. குறிப்பிட்ட சாதி பெண்கள் கோயிலுக்கு பொட்டு கட்டும் தேவதாசி முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. பேருந்துகளில் தாழ்த்தப்பட்டவர் உரிமை அளித்தது நீதி கட்சி தலைவர் சவுந்திரபாண்டியனார். கல்வி சாலைகளை அனைவருக்கும் என்று பள்ளிகளை திறந்தவர் காமராஜர். அதனால் அண்ணாவும், கலைஞரும் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தனர். இன்றைய திராவிட மாடல் ஆட்சி உயர்கல்வி, ஆராய்ச்சி கல்விக்கு முக்கியத்து அளித்து வருகிறது. அனைவரையும் உயர்த்துவது திராவிட மாடல் ஆட்சி. இந்த காரணங்களுக்கு நம்மை சிலர் எதிர்க்கிறார்கள். அடக்கி வைக்கப்பட்டவர்களை உயர்த்துகிறார்களே என்று எதிர்க்கிறார்கள். மகளிருக்கு இலவச பேருந்து பயணம் காரணமாக எதிர்க்கிறார்கள்.

படிக்க வரும் பெண்களுக்கு ஆயிரம் தருகிறார்களே என்று எதிர்க்கிறார்கள். அனைவரையும் நாம் முன்னேற்றுவது இவர்களுக்கு பிடிக்கவில்லை. இந்த சமூக நீதிதான் திராவிட இயக்கத்தின் முதலும் இறுதியுமான குறிக்கோள். 1924ல் பெரியார் வைக்கம் சென்று போராடினார். ஒடுக்கப்பட்ட மக்கள் கோயில் தெருவில் நடக்க கூடாது என்பதற்கு எதிராக போராடிய போராட்டம் நின்றுவிட கூடாது என்று வைக்கம் சென்று போராடினார். தமிழ்நாட்டில் காங்கிரஸ் சுய மரியாதை இயக்கம் போராடி வெற்றி பெற்றது. அந்த போராட்டம் எனக்கு ஊக்கம் அளித்தது என்று அம்பேத்கர் கூறினார். 100 ஆண்டுகள் ஆக போகிறது. அடுத்த ஆண்டு அந்த நூற்றாண்டு விழாவை கொண்டாட உள்ளோம். கேரள முதல்வர் அடுத்த ஆண்டு தமிழக அரசும் சேர்ந்து வைக்கம் நூற்றாண்டு வெற்றி விழாவை கொண்டாட வேண்டும் என்று விருப்பத்தை தெரிவித்துக்கொள்கிறேன். தானாக ஏதும் மாறிவிடவில்லை, தலைவர்கள் மாற்றினார்கள்.

சமூக அழுக்குளை சட்டத்தாலும் மன மாற்றத்தாலும் மாற்ற வேண்டும். சீர்திருத்த எண்ணங்கள் கொண்டவர்கள் இதுபோன்ற விழாக்கள் மூலம் மனமாற்றம் ஏற்பட செய்ய வேண்டும். ஆயிரமாண்டு அழுக்கை ஒரு நூற்றாண்டில் மொத்தமாக துடைத்துவிட முடியாதுதான். ஆனாலும் நமது சமூகநீதி போராட்டத்தை தொடர்வோம். தாழ கிடப்பாரை தற்காப்பதே தர்மம் என்று அய்யா வைகுண்டர் கொள்கையை எதிரொலிப்போம். இவ்வாறு அவர் பேசினார். விழாவில் கேரள முதல்வர் பினராயி விஜயன், அமைச்சர் மனோதங்கராஜ், மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி, தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், பாலபிரஜாபதி அடிகள், விஜய்வசந்த் எம்.பி உள்ளிட்டோர் உரையாற்றினர்.  


Tags : CM ,Stalin ,Shoulder Struggle , Millennium dirt, social justice struggle will continue, shoulder struggle, Chief Minister M.K. Stalin's speech
× RELATED ஜூன் 4ல் வாக்கு எண்ணிக்கை முகவர்கள்...