×

மனுக்கள் ஒரு மனிதரின் வாழ்க்கை, கனவு, எதிர்காலம் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் திட்டங்களுக்கு முக்கியத்துவம் தரவேண்டும்: கள ஆய்வு கூட்டத்தில் அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை

மதுரை: கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று மதுரையில் நடந்த கள ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மதுரை கலெக்டர் அலுவலகத்தில், ‘கள ஆய்வில் முதலமைச்சர்’ திட்டத்தின் கீழ் மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை மற்றும் தேனி மாவட்டங்களின் மாவட்ட கலெக்டர்கள் மற்றும்  அரசு உயர் அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது.

கூட்டத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
தென்மாவட்டங்களை பொருளாதார ரீதியாகவும், தொழில்ரீதியாகவும் மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை இந்த அரசு உணர்ந்துள்ளது. அதற்காக பல திட்டங்களை வகுத்துள்ளது. அதேநேரம் அரசு அறிவித்துள்ள பல்வேறு முக்கிய வளர்ச்சித் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டிய முக்கிய பொறுப்பு அதிகாரிகளுக்கு உள்ளது. கிராமப்புற மக்களின் வருமானத்தைப் பெருக்கவும், வாழ்வாதாரத்தை உயர்த்தவும் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களில், அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

  மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் ஆகியவற்றில் நல்ல முன்னேற்றம் காட்டப்பட வேண்டும். ஏழை, எளிய மக்கள் மற்றும் விவசாய மக்களின் வாழ்வாதாரத்தோடு நேரடித் தொடர்புடைய திட்டங்களாக இது அமைந்துள்ளது. வேலை உறுதி திட்டத்தின் கீழ் குடும்பங்களுக்கு வேலை வழங்கப்படக்கூடிய சராசரி நாட்களை உயர்த்துவதற்கு தேவையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். அதேபோல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் உங்களுக்கு வழங்கப்பட்ட தொகையினை விரைந்து முழுமையாக செலவு செய்து முடியுங்கள்.

சமுதாயத்தில் பின்தங்கியுள்ள மக்கள், மாற்றுத்திறனாளிகள், குழந்தைகள், அரசு மருத்துவமனையை நாடும் ஏழை எளிய மக்கள், அரசுப்பள்ளிகள் மற்றும் விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவ, மாணவியர், திருநங்கையர் ஆகியோரின் தேவைகளை, குறைகளை அறிந்து அவற்றை நிறைவேற்ற வேண்டும். அதிகாரிகள் இதனை உணர்ந்து மாநிலத்திற்கான பொதுவான திட்டங்களோடு, தங்கள் மாவட்டத்திற்கே உரிய திட்டங்களையும் அரசுக்கு எடுத்துக்கூறி அவற்றை செயல்படுத்திட முயல வேண்டும்.  இதனை நான் அடுத்த ஆய்வுக் கூட்டத்தின்போது கட்டாயம் சரி பார்ப்பேன்.

மக்கள் பணி என்பது முழு ஈடுபாட்டுடன் செய்ய வேண்டிய ஒன்றாகும். பெரும் நம்பிக்கையோடு மக்கள் உங்களை நாடி வந்து மனுக்களை சமர்ப்பிக்கின்றனர். தங்கள் கோரிக்கைகளை பெரும் எதிர்பார்ப்போடு அளிக்கின்றனர். அவர்களை பொறுத்தவரை நீங்கள் தான் அரசு. எனவே, உங்களால் இயன்றவரை அந்தப் பிரச்னையை, தேவையை பூர்த்தி செய்ய நீங்கள் முயற்சி எடுக்க வேண்டும். நான் முந்தைய ஆய்வுக்கூட்டத்தில் தெரிவித்ததைப் போல, மனுக்கள் என்பது வெறும் காகிதம் அல்ல. அது ஒரு மனிதரின் வாழ்க்கை, கனவு, எதிர்காலம். நியாயமாக ஒருவர் கோருவதை நிறைவேற்ற வேண்டியது நம் கடமை. இன்றைய ஆய்வுக் கூட்டத்தில் பல்வேறு கருத்துகள் தெரிவித்தீர்கள். உறுதிகள் அளித்திருக்கிறீர்கள். இந்த உறுதிகளை நீங்கள் காப்பாற்றுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. உங்கள் சிறப்பான செயல்பாட்டுக்கு அரசு என்றும் துணை நிற்கும். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Chief Minister ,MK Stalin , Petitions A Man's Life, Field Study Meeting, Chief Minister M.K.Stal's Advice to Officers
× RELATED டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு...