×

இ-சிகரெட் விற்பனையை தடுத்து போதை, புற்றுநோயில் இருந்து மாணவர்களை மீட்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: சட்ட விரோத இ-சிகரெட்டுகள் விற்பனையை தடுத்து, போதை, புற்றுநோயில் இருந்து மாணவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

 பாமக தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
புகைப்பழக்கத்திற்கு அடிமையானவர்களை அப்பழக்கத்திலிருந்து மீட்பதற்காக கருவிகள் என்ற பெயரில் தான் இ-சிகரெட்டுகள் 20 ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் ஆயின. ஆனால், இ-சிகரெட்டுகளே இப்போது இளைஞர்களை சீரழிக்கும் சக்தியாக மாறியிருக்கின்றன. இ-சிகரெட்டுகளுக்கு அடிமையான இளைஞர்கள், மாணவர்களால் அவற்றிலிருந்து மீண்டு வர முடியாது.

தமிழ்நாட்டில் இ-சிகரெட்டுகள் பல்வேறு பெயர்களில் சட்டவிரோத சந்தைகளில் கிடைக்கின்றன. 100 முறை இழுக்கக்கூடியவற்றில் தொடங்கி 5000 முறை இழுக்கக்கூடியவை வரை என பல அளவுகளில் இ-சிகரெட்டுகள் கிடைக்கின்றன. தமிழ்நாடு உள்ளிட்ட 15 மாநிலங்களில் இ-சிகரெட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டு விட்டது. ஆனால், சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் கல்வி நிலையங்கள், பொழுதுபோக்கு விடுதிகள், பள்ளிகள் என அனைத்து இடங்களிலும் இ-சிகரெட்டுகள் தடையின்றி கிடைக்கின்றன. அவற்றை தடுக்க காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.

அதனால் ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் இ-சிகரெட்டுகளுக்கு அடிமையாகி தங்களின் வாழ்க்கையையும், உடல்நலத்தையும் இழந்து கொண்டிருக்கின்றனர். இது ஆபத்தானது. தமிழ்நாட்டின் இளைஞர்களும், மாணவர்களும் எந்த பாதிப்புக்கும் ஆளாகாமல் தடுக்க வேண்டியது தமிழ்நாடு அரசின் கடமை ஆகும்.


Tags : Anbumani , E-cigarette sales, prevention of drug addiction, cancer, Anbumani emphasis
× RELATED “தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத்...