×

சாத்தியக்கூறுகளை ஆராய அறிவுரை சென்னையிலிருந்து பினாங்குக்கு நேரடி விமான போக்குவரத்து: ஒன்றிய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம்

சென்னை: சென்னையில் இருந்து மலேசியாவில் உள்ள பினாங்குக்கு நேரடி விமான போக்குவரத்தை தொடங்க சாத்தியக்கூறுகளை ஆராய்ந்திட நிறுவனங்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாக ஒன்றிய  சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். சென்னையில் இருந்து மலேசியாவில் உள்ள பினாங்குக்கு நேரடி விமான போக்குவரத்தை அறிமுகப்படுத்த முன்னுரிமை அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்தி, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஒன்றிய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 11-2-2023 அன்று கடிதம் எழுதியிருந்தார்.  

அந்த கடிதத்தில், பினாங்குவில் வாழும் தமிழர்கள் குறித்தும், பினாங்கு மற்றும் மலேசியாவின் வளர்ச்சிக்கு அவர்கள் ஆற்றி வரும் அளப்பரிய பங்களிப்பினையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டு இருந்தார். தமிழ்நாட்டிற்கும் பினாங்குவிற்கும் இடையிலான கலாச்சார பிணைப்புகளையும், வர்த்தக உறவுகளையும், சுற்றுலா வாய்ப்புகள் குறித்தும் கோடிட்டு காட்டியிருந்தார். இந்நிலையில், கோவிட் பெருந்தொற்றிற்கு பிறகு, தற்போது சுற்றுலா துறையில் ஏற்பட்டுள்ள எழுச்சியை பயன்படுத்திக் கொள்ளவும், தமிழ்நாட்டிற்கும் மலேசியாவுக்கும் இடையிலான வணிக உறவுகளை மேம்படுத்தவும், தமிழ் மக்களின் வேண்டுகோளை நிறைவேற்றும் வகையில், சென்னைக்கும் பினாங்குவிற்கும் இடையே நேரடி விமானங்களை முன்னுரிமை அடிப்படையில் அறிமுகப்படுத்திடவும், தனது கடிதத்தில் முதல்வர் கோரியிருந்தார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதத்தினை பரிசீலித்த ஒன்றிய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, தனது 2-3-2023 நாளிட்ட கடிதத்தில், சென்னை மற்றும் பினாங்குவிற்கு இடையே நேரடி விமான சேவையை தொடங்குவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்திட இந்திய விமான நிறுவனங்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்திய விமான நிறுவனங்களின் ஆதரவுடன் பன்னாட்டு விமான போக்குவரத்தை ஊக்குவிப்பதில் ஒன்றிய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் உறுதிபூண்டுள்ளதாகவும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Tags : Chennai ,Penang ,Union Minister ,Jyotiraditya Scindia ,Chief Minister ,M.K.Stalin. , Letter to Union Minister Jyotiraditya Scindia, Chief Minister M. K. Stalin advising him to explore possibilities, Air Transport
× RELATED பிரேக்கிங் செய்திகளுக்காக தவறான...