×

எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம் சார்பில் தேசிய அளவிலான கலை திருவிழா: மாணவர்கள் உற்சாக பங்கேற்பு

செங்கல்பட்டு: எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம் சார்பில் ஆண்டுதோறும் ‘ஆருஷ்’ என்கிற தொழில்நுட்ப திருவிழா, ‘மிலான்’ என்கிற கலைத்திருவிழா, விளையாட்டு திருவிழா என 3 முக்கிய நிகழ்வுகள் நடத்தப்படுகிறது. இந்த நிகழ்வுகள் அனைத்தும் முழுக்க முழுக்க மாணவர்களின் பங்களிப்பாக மட்டுமே நடைபெற்று வருகிறது. இந்தாண்டு நடத்தப்பட்ட மிலான் கலைவிழாவில் நாடு முழுவதிலிருந்து 150 கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழக மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இந்த கலைத்திருவிழாவில் மாணவ, மாணவியரின் நடனம், நாட்டியம், ஆடல், பாடல், இசை நிகழ்ச்சிகள், அந்தாக்சிரி எனப்படும் பாட்டுக்கு பாட்டு, ஆடை அலங்கார அணிவகுப்பு, மிஸ்டர் மிலான், மிஸ் மிலான் போட்டிகள் மற்றும்  பல்வேறு விளையாட்டு போட்டிகள் உள்ளிட்ட 150 விதமான நிகழ்வுகள் இடம் பெற்றன.

கடந்த 2ம் தேதி மிலான் நிகழ்வை பிரபல தெலுங்கு திரைப்பட நடிகர் நானி தொடங்கி வைத்து கலைவிழா மலரை வெளியிட்டார். இதனை தொடரந்து நான்கு நாட்களாக நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரபல திரைப்பட இசை அமைப்பாளர் சந்தோஸ் நாராயணன், பின்னணி பாடகர் கார்த்தி பங்கேற்ற இசை நிகழ்ச்சி, போர்ச்சுகல் நாட்டின் டீஜே இசைக்குழுவினரின் இசை நிகழ்ச்சி முதன் முதலாக நாட்டில் இங்கு நடத்தப்பட்டது. பிரபல காமெடி மேடை பேச்சாளர் சுந்தீப் சர்மாவின் காமெடி நிகழ்ச்சி, மாணவ, மாணவியரின் ஆடை அலங்கார அணிவகுப்பு, மிஸ்டர் மிலான், மிஸ் மிலான் போட்டிகள், கிரிக்கெட், வாலிபால், பேட்மிட்டேன், செஸ், கபாடி உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று மகிழ்ந்தனர்.

எஸ்ஆர்எம் மிலான்’ 2023 கலைத்திருவிழா நிறைவு விழா நேற்று இரவு  எஸ்ஆர்எம் வளாகத்தில் உள்ள டி.பி.கணேசன் கலையரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை மிலான் விழாக்குழு இணைச்செயலாளர் எஸ்.மோனிஷா வரவேற்றார். எஸ்ஆர்எம்  மாணவர் விவகார இணை இயக்குனர் டாக்டர் நிஷா அசோகன் முன்னிலை வகித்தார். இந்த விழாவில் பிரபல விஜய் டிவி புகழ் தமிழ் திரைப்பட நடிகர் கவின் ராஜ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மிலான் கலை விழாவில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் மிலான் கலைவிழா மாணவர் அமைப்பாளர்களுக்கும்  பரிசுகள் வழங்கி வாழ்த்தி பேசினார்.

விழாவில் நடிகர் கவின்ராஜ் பேசுகையில், ‘‘நாட்டில் முன்னணி உயர்கல்வி நிறுவனமாக விளங்கிவரும் எஸ்ஆர்எம் நிறுவனத்தில் நடைபெறும் மிலான் கலைத்திருவிழாவில் பங்கேற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன், பரிசு பெற்ற மாணவர்களை வாழ்த்துகிறேன். நான் இந்த வழியாக ரயிலில் செல்லும் போது, வரும்போது எஸ்ஆர்எம் கல்வி நிறுவனத்தை பார்த்து செல்வேன், இதில் படிக்க வேண்டும் என்று ஆர்வம் ஏற்பட்டு விண்ணப்பித்தேன். ஆனால், இதில் படிக்க வாய்ப்பு கிடைக்காமல்  போய்விட்டது.

ஆனாலும் இந்த விழாவின் மூலமாக இங்கு உங்கள் முன்பு நிற்பது மகிழ்ச்சி அளிக்கிறது, படிப்பு மட்டுமின்றி உங்களிடயே புதைந்து இருக்கும் பொது அறிவுத்திறனை வெளியே கொண்டு  வரவும் அதனை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்  வாய்ப்பு உங்களுக்கு கிடைத்துள்ளது. நீங்கள் அதனை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு முன்னேற வேண்டும்.’’ என்றார். நிகழ்ச்சியில் தாம்பரம் மாநகர காவல்துறை துணை ஆணையர் அதிவீரபாண்டியன் கௌரவ விருந்தினராக பங்கேற்று வாழ்த்தி பேசினார். முடிவில்  எஸ்ஆர்எம்  மாணவர் விவகார துணை இயக்குனர் பிரின்ஸ் கல்யாண சுந்தரம் நன்றி தெரிவித்தார். நிகழ்ச்சியில் மிலான் கலைத்திருவிழாவில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு தொகையாக ரூ.9 லட்சம் வழங்கப்பட்டது.

Tags : National Art Festival ,SRM Institute of Science and Technology , National Art Festival organized by SRM Institute of Science and Technology: Students participate enthusiastically
× RELATED எஸ்ஆர்எம் கல்லூரியில் கருத்தரங்கம்;...