வாகனம் வாங்கி சுயதொழில் தொடங்க பழங்குடியினர் ஆதிதிராவிடர்களுக்கு மானியத்துடன் கடனுதவி: கலெக்டர் ஆர்த்தி தகவல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த பழங்குடியினர் மற்றும் ஆதிதிராவிடர்கள் வாகனங்கள் வாங்கி சுயதொழில் தொடங்க மனியத்துடன் கடனுதவி வழங்கப்படும் என கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளனார். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசு, புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தை, 2012-13ம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில்  படித்த, சுயதொழில் துவங்க ஆர்வமுள்ள முதல் தலைமுறை தொழில் முனைவோர் பயன் பெறலாம். இத்திட்டத்தின் கீழ், உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த திட்டத்தொகையாக, ரூ.10 லட்சம் முதல் ரூ.5 கோடி வரை, தொழில் திட்டங்களுக்கு, மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்படுகிறது.

இந்த மானியம் திட்ட தொகையில், 35 சதவீதம் பழங்குடியினர் மற்றும் பட்டியல் இனத்தை சேர்ந்தவர்கள் வாகனங்கள் வாங்க, மானியத்துடன் கடனுதவி வழங்க சிறப்பு சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இதில், காஞ்சிபுரம் மாவட்டத்தை சார்ந்த, 12ம் வகுப்பு தகுதிபெற்ற, பழங்குடியினர் மற்றும் பட்டியலினத்தவர் டாக்சி, டூரிஸ்ட் வாகனங்கள், ஆம்புலன்ஸ், பேருந்து, மினி பேருந்து, சரக்கு போக்குவரத்துக்கான லாரி, டிரக் போன்றவற்றை மானியத்தில் வாங்கி பயன்பெறலாம்.

இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட தொழில் மைய அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது 044-2723 8837, 044-2723 8551 ஆகிய தொலைபேசிகள் மூலமாகவோ அணுகலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: