செங்கல்பட்டு மருத்துவ கல்லூரியில் ரூ.5.23 கோடியில் மருத்துவ கட்டிடங்கள்: அமைச்சர்கள் திறந்து வைத்தனர்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று‌ மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும்  குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் ரூ.5 கோடியே 23 லட்சம் செலவில் கட்டப்பட்ட பல்வேறு மருத்துவ கட்டிடங்களை திறந்து வைத்து, முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கு வெள்ளை அங்கி அணிவித்து, கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கினர். இந்நிகழ்ச்சிக்கு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் நிறுவனங்கள் துறை அமைச்சர் தலைமை வகித்தார்.  செங்கல்பட்டு  கலெக்டர் ராகுல் நாத் முன்னிலை வகித்தார். செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி முதல்வர் வரவேற்றார்.  

பின்னர், அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: ‘‘செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு மேம்படுத்தப்பட்ட மருத்துவ கட்டமைப்புகள்  திறந்து வைத்து பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ரூ.1 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு கட்டிடம், இந்தியாவிலேயே முதல் முறையாக ரூ.47. 6 இலட்சம் மதிப்பீட்டில், பரவலாக்கப்பட்ட கழிவு நீர் சுத்திகரிப்பு அமைப்பு ரூ.10 லட்சம் செலவில் உடற்பயிற்சி கூடம் திறந்து வைக்கப்பட்டது.

மேலும் ரூ.30 லட்சம் செலவில் செங்கல்பட்டு துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலக  வளாகத்தில் பொது சுகாதாரத் துறையின் நூற்றாண்டு விழா நினைவு வளைவு திறந்து வைக்கப்பட்டது. என அவர் தெரிவித்தார். இந்நிகழ்வில், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் வரலட்சுமி மதுசூதனன், அரவிந்த் ரமேஷ் மற்றும் எஸ்.எஸ்.பாலாஜி, செங்கல்பட்டு மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர்  செம்பருத்தி துர்கேஷ், நகர்மன்ற தலைவர் தேன்மொழி நரேந்திரன், செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி முதல்வர் கி.நாராயணசாமி, துணை முதல்வர் அ.அனிதா செங்கல்பட்டு துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் பரணிதரன் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: