×

தவறான சிகிச்சையால் உயிரிழந்தவர் விவகாரம் பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்: சப்கலெக்டர் பேச்சுவார்த்தை

பொன்னேரி: தவறான சிகிச்சையால் உயிரிழந்தவர் விவகாரத்தில் பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு இறந்தவரின் உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சப்கலெக்டர், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பொன்னேரி அடுத்த பாக்கம் கிராமத்தில் வசித்தவர் அருள்தாஸ் (42). இவர் சமையல் கலைஞர் ஆவார். இவருக்கு லாவண்யா என்ற மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு காலில் புண் ஏற்பட்டதாக கூறி சோழவரத்தில் உள்ள தனியார் கிளிக்குக்கு சிகிச்சைக்காக அருள்தாஸ் சென்றுள்ளார். அங்கு கமல்ராஜ் என்ற மருத்துவர் அவருக்கு சிகிச்சை அளித்துள்ளார்.

அப்போது ஓவர்டோஸ் கொண்ட ஊசி மாத்திரையை மருத்துவர் கொடுத்ததாகவும், அதனால் மருத்துவமனையிலேயே அருள்தாஸ் சுருண்டு விழுந்ததாகவும் கூறப்படுகிறது. அவரை அருகாமையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலமாக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்தபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். பின்னர் காவல் துறையினரின் உதவியோடு உடனடியாக அருள்தாஸ் உடல் ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

இதுகுறித்து சோழவரம் காவல் நிலையத்தில் அருள்தாஸ் உறவினர்கள் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. 4 நாட்கள் ஆகியும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் நேற்று பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு இறந்துபோன அருள்தாஸின் மனைவி லாவண்யா மற்றும் 3 குழந்தைகள் உள்ளிட்ட அவரது உறவினர்கள் 50க்கும் மேற்பட்டோர் நீதி கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்பாட்டம் நடத்தியவர்களை பொன்னேரி சப்கலெக்டர் ஐஸ்வர்யா ராமநாதன் அழைத்துப் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதனால் ஒரு மணி நேரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Ponneri Kotaksiyar , Demonstration in front of Ponneri Kotaksiyar's office on the issue of ill-treatment: sub-collector talks
× RELATED பெண் போலீஸ் ஏட்டு தற்கொலை