×

வாணியம்பாடி அருகே ஆம்புலன்ஸ் வர காலதாமதம்: நிறைமாத கர்ப்பிணி சாவு; மலைவாழ் மக்கள் மறியல்: ஆர்டிஓ சமரசம்

வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே ஆம்புலன்ஸ் வர காலதாமதம் ஆனதால் நிறைமாத கர்ப்பிணி பரிதாபமாக இறந்தார். இதனால் சாலை மற்றும் மருத்துவ வசதி செய்து தரக்கோரி மலைவாழ் மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே உள்ள மலைக்கிராமமான சிந்தகமணிபெண்டா பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார்(27), கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி சரண்யா(24). இவர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 வயதில் மகள் உள்ளார். தற்போது சரண்யா மீண்டும் 9 மாத கர்ப்பமாக இருந்தார். நேற்று சரண்யாவிற்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் உறவினர்கள்  108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர்.

ஆனால் ஆம்புலன்ஸ் வருவதற்குள் சரண்யா மயங்கினார். இதையடுத்து வந்த ஆம்புலன்ஸ் மூலம் சரண்யாவை வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், சரண்யா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதைகேட்டு சரண்யாவின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர். மலை கிராமத்திற்கு போதிய சாலை வசதி, மருத்துவ வசதி இல்லாத காரணத்தினால்தான் ஆம்புலன்ஸ் வர காலதாமதமானது. உரிய நேரத்தில் ஆம்புலன்ஸ் வந்திருந்தால் சரண்யாவையும், குழந்தையையும் காப்பாற்றி இருக்கலாம். எனவே மலைகிராமத்திற்கு மருத்துவ வசதி மற்றும் சாலை வசதி உடனடியாக செய்து தர வேண்டும் எனக்கோரி வெலதிகமனிபெண்டா-வாணியம்பாடி நேற்று மாலை சாலை மறியலில் ஈடுபட்டனர்.  

இதுகுறித்து தகவலறிந்த வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா மற்றும்  வருவாய்த்துறையினர், வாணியம்பாடி டவுன்  இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்க இன்று (நேற்று) முதல் மலைகிராமத்திலேயே  ஒரு 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதையேற்று பொதுமக்கள் இரவு 9 மணியளவில் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : Vayambadi ,Sawu , Ambulance delayed near Vaniyambadi: 1-month-old pregnant woman dies; Hill people's strike: RTO compromise
× RELATED திட்டக்குடியில் நேபாள நாட்டு தொழிலாளி மர்ம சாவு