×

பொள்ளாச்சி பகுதியில் தென்னை நார் உற்பத்தி அதிகரிப்பு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி கிராம பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால், தொழிற்சாலைகளில் தென்னை நார் உற்பத்தி துவங்கியுள்ளது. இதற்காக நார் உலர வைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை சுற்றுவட்டார கிராமங்களில் தென்னை விவசாயம் அதிகளவில் நடைபெறுகிறது. தென்னையில் இருந்து பறிக்கப்படும் மட்டையை பிரித்து நாராக உற்பத்தி செய்ய, 250க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இப்பகுதியில் உள்ளன. தற்போது மழை காலம் முடிந்து வெயில் தாக்கம் அதிகரித்து வருவதால் களன்களில் நார் உலர வைக்கும் பணி துவங்கியுள்ளது.

இங்கு உற்பத்தியாகும் தென்னை நார்கள் தமிழகம் மட்டுமின்றி, வெளிமாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. கடந்த ஆண்டில், மே மாதம் கோடை மழையும் அதன்பின் ஜூன் முதல் தொடர்ந்து மூன்று மாதமாக தென்மேற்கு பருவமழையும் பெய்ததால், தொழிற்சாலைகளில் நார் உலர வைக்கும் பணி தடைபட்டு, அதன் உற்பத்தி பாதிக்கப்பட்டது. பல மாதமாக மழை விட்டுவிட்டு பெய்ததால் நார் உலரவைக்க முடியாமல் உற்பத்தியாளர்கள் தவித்தனர்.

டிசம்பர் மாதத்திலிருந்து மழை குறைவால் தொழிற்சாலைகளில் நார் உற்பத்தி அதிகமானதுடன், உலர வைக்கும் பணியும் அதிகரிக்க துவங்கியது. இந்த ஆண்டு துவக்கத்திலிருந்து வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், தொடர்ந்து நார் உலர வைக்கும் பணியில் உற்பத்தியாளர்கள் ஈடுபட்டு, நார் உற்பத்தியை அதிகரிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். ஆட்கள் பற்றாக்குறை காரணமாக டிராக்டரில் நவீன இயந்திரம் பொருத்தி நாரை உலர வைக்கும் பணியில் சில விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். நார் உற்பத்தியாளர்கள் கூறுகையில், ‘‘ஒவ்வொரு ஆண்டும் வெயிலின் தாக்கம் இருக்கும்போது, தென்னை நார் உற்பத்தி அதிகரிக்கும்.

கடந்த ஆண்டில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்ததால், 4 மாதத்திற்கு மேலாக நார் உற்பத்தி மந்தமானது. இதனால் அந்நேரத்தில் வெளியிடங்களுக்கு நார் ஏற்றுமதி குறைந்தது. ஆனால் கடந்த இரண்டு மாதத்திற்கு மேலாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் தொழிற்சாலைகளில் நார் உற்பத்தி செய்து அதனை உலர வைக்கும் பணி நடைபெறுகிறது. வரும் நாட்களில் கோடை வெயிலின் தாக்கம் இருக்கும்போது, நார் உற்பத்தி மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது’’ என்றனர்.

Tags : Pollachi , Increase in coir production in Pollachi region
× RELATED பொள்ளாச்சியில் ஓய்வுபெற்ற பெண் கும்கி யானை உயிரிழப்பு..!!