×

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அறிவிப்புகள் வழக்கம்போல் ஒலிபெருக்கிகள் மூலம் அறிவிக்கப்படும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அறிவிப்புகள் வழக்கம்போல் ஒலிபெருக்கிகள் மூலம் அறிவிக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஒலிமாசு குறைக்கும் வகையில் ரயில் தகவல் அறிவிப்புகள் ஒலிபெருக்கிகள் மூலம் அறிவிக்கப்படாமல் இருந்தது. ஒலிபெருக்கியில் அறிவிக்காமல் இருந்ததற்கு பார்வை செவித்திறன் மாற்றுத்திறனாளிகள் ஏதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்தியாவின் மிகப்பெரிய, தமிழகத்தின் மிகப் பழைமையான ரயில் நிலையங்களில் ஒன்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம். ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான ரயில்களைக் கையாளும் இந்த ரயில் நிலையத்துக்கு லட்சக்கணக்கான பயணிகள் நாள்தோறும் வந்து செல்கின்றனர். இந்தப் பயணிகளின் வசதிக்காக, ரயில்களின் எண், நிற்கும் நடைமேடை எண், புறப்படும் நேரம், வந்துசேரும் நேரம் உள்ளிட்ட அத்தனை தகவல்களும் ஒலிபெருக்கி வாயிலாக அறிவிக்கப்பட்டுவந்தது.

இதன்மூலம் பயணிகள் எந்த மூலையில் இருந்தாலும் அவர்களுக்குத் தேவையான விவரங்கள் அவர்களின் காதுகளைத்தேடி எளிதில் கிடைக்கும்படியாக இருந்தது. மேலும், படிக்கத்தெரியாத பாமரர்கள், பார்வைத்திறனற்ற மாற்றுத்திறனாளிகளுக்கும்கூட பயனுள்ளதாக இருந்துவந்தது. இந்த நிலையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் சர்வதேசத் தரத்தில் மேம்படுத்தப்படவிருப்பதாகவும், அதற்கான முன்னோட்ட முயற்சியாக ரயில் நிலையத்தில் காலங்காலமாக இருந்துவரும் ஒலிபெருக்கி அறிவிப்புகளை நிறுத்திவிட்டு முழுவதும் டிஜிட்டல் திரையில் படித்து தெரிந்துகொள்ளும்படி புதிதாக மாற்றம் தென்னக ரயில்வே செய்தது.

இதைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி 27-ம் தேதி முதல், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஒலிபெருக்கி அறிவிப்புகள் முழுவதுமாக நிறுத்தப்பட்டிருக்கின்றன. அதற்கு பதிலாக, ரயில்களின் எண், நடைமேடை எண், புறப்படும்-வந்தடையும் நேரம் என அனைத்துத் தகவல்களும் டிஜிட்டல் திரையில் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. மேலும், பயணிகளின் வசதிக்காக `உதவி மையங்கள் (Help Desk) சில திறக்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக நுழைவு வாயில்களில் `பிரெய்லி முறையில் வரைபடங்கள் தயாரிக்கப்பட்டு அமைக்கப்பட்டிருக்கிறது.

இருப்பினும் இந்தப் புதிய மாற்றத்தால் பெரும் சிக்கலுக்கு ஆளாகிவருவதாக பாதிக்கப்பட்ட ரயில்வே பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனிடையில் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு நிறுத்தப்பட்டதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு எழுந்தது இதனையடுத்து சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மீண்டும் ஒலிபெருக்கி மூலம் வெளியிடப்படுகிறது. ரயில்களின் புறப்பாடு நேரம் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி என மூன்று மொழிகளிலும் ஒலிபெருக்கி மூலம் வெளியிடப்படுகிறது.


Tags : Chennai Central Railway Station , Announcements at Chennai Central Railway Station will be announced over loudspeakers as usual: Southern Railway Announcement
× RELATED சிக்னல் கோளாறு: ரயில் பயணிகள் பாதிப்பு