மதுராந்தகம்: ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரி சார்பில், ஆன்மிக குரு பங்காரு அடிகளாரின் 83வது பிறந்த நாளை முன்னிட்டு, மாநில அளவிலான டி20 கிரிக்கெட் போட்டியை டிஎஸ்பி மணிமேகலை துவக்கி வைத்தார்.செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரி சார்பில், ஆன்மிக குரு பங்காரு அடிகளாரின் 83வது பிறந்த நாளை முன்னிட்டு, அம்மா டிராபி என்ற தலைப்பில், நேற்று மருத்துவக் கல்லூரியின் ஜி.பி. விளையாட்டு அரங்கில் மாநில அளவிலான டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரி நிர்வாக அறங்காவலர் கோ.ப.அன்பழகன் தலைமை தாங்கினார். மேல்மருவத்தூர் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் அ.ஆ.அகத்தியன் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் மோன்சிங் வரவேற்றார்.
இந்நிகழ்ச்சியில் மதுராந்தகம் டிஎஸ்பி மணிமேகலை, செங்கல்பட்டு மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அலுவலர் ஜெயசித்ரா ஆகியோர் பங்கேற்று, மாநில அளவிலான டி20 கிரிக்கெட் போட்டியை துவக்கி வைத்தனர். பின்னர் இப்போட்டியில் பங்கேற்கும் 42 கல்லூரி அணிகளின் வீரர்களை அறிமுகம் செய்து, சமாதான புறாக்களை பறக்க விட்டனர்.முதல் நாள் போட்டியில் சென்னை சாய்ராம் பொறியியல் கல்லூரி, திண்டிவனம் கோவிந்தசாமி கலைக்கல்லூரி அணிகள் மோதின. இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாக அதிகாரி லிங்கநாதன், சக்தி கோபிநாத், அருள்ஜோதி மற்றும் ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரி அலுவலர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.