புதுடெல்லி: போலீஸ் ஏட்டுவிடம் ரூ. 14 லட்சத்தை வாங்கிக் கொண்டு ஏமாற்றிய நபர், டெல்லி காவல் நிலையத்தின் மூன்றாவது மாடியில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய டெல்லியின் கமலா மார்க்கெட் காவல் நிலையத்தின் மூன்றாவது மாடியில் மர்ம ஒருவர் ஏறினார். தடுப்புச் சுவரின் வழியாக பால்கனிக்கு சென்றார். கீழ் தளத்தில் இருந்து அவரது நடமாட்டத்தை பார்த்த போலீசார், ‘கீழே குதிக்க வேண்டாம்’ என்று அறிவுறுத்தினர். ஆனால் அந்த நபர் மூன்றாவது மாடியில் இருந்து கீழே குதித்தார். படுகாயமடைந்த அவரை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் போலீசார் சேர்த்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘டெல்லி உத்தம் நகரைச் சேர்ந்த புரோக்கர் ஆனந்த் வர்மா (45) என்பவர், ஒருவருக்கு அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி கமலா மார்க்கெட் போலீஸ் ஏட்டு அஜித் சிங் ஆனந்த்திடம் ரூ.14 லட்சத்தை வாங்கிக் கொண்டு ஏமாற்றி வந்துள்ளார். அதையடுத்து ஆனந்த் வர்மாவை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து அஜித் சிங் விசாரித்தார். தொடர்ந்து ஆனந்த் வர்மாவுக்கு எதிராக வழக்கு பதிவு செய்தார். இதற்கிடையே பணத்தைத் திருப்பித் தருவதாக உறுதியளித்ததன் பேரில், ஆனந்த் வர்மாவை அஜித் சிங் அனுப்பி வைத்தார். ஆனால் ஆனந்த் வர்மா காவல் நிலையத்தின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இவ்விவகாரம் தொடர்பாக ஏட்டு அஜித் சிங் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது’ என்றனர்.