×

திருச்சி மாநகரை அழகுப்படுத்தும் வகையில் மின்னொளியில் ஜொலிக்கும் ‘அரிஸ்டோ’ மேம்பாலம்

திருச்சி: திருச்சி மாநகரை அழகுப்படுத்தும் வகையில் இரவுநேரங்களில் ‘அரிஸ்டோ’ மைதானம் மின்னொளியில் ெஜாலிக்கிறது. திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வார்டு பகுதிகளில் ஸ்மார்ட் திட்டத்தின் கீழ் பாதாள சாக்கடை குழாய் பதிக்கும் பணிகள் மற்றும் 50 ஆண்டுக்கு மேலாக உள்ள குடிநீர் குழாய்கள் மாற்றி அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. இதில் பாதாள சாக்கடை பணிகள் தற்போது 75 சதவீதம் முடிவடைந்துள்ள பகுதிகளில் சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் மீதமுள்ள பகுதிகளில் பணிகளை விரைந்து முடிக்க மாநகராட்சி மேயர் அன்பழகன், கமிஷனர் வைத்திநாதன் ஆகியோர் ஒப்பந்தக்காரர்களுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

இதற்கிடையில், மாநகராட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் பயன்பாட்டை அறவே ஒழிக்கும் வகையில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மேலும், கடைகளில் பிளாஸ்டிக் பைகளில் பொருட்கள் வழங்க கூடாது எனவும், மீறி வழங்கினால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கையும் விடப்பட்டு திடீர் ஆய்வு நடத்தி அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.

அதுபோல் திறந்தவெளியில் மலம் கழிப்பதை தடுக்கும் வகையில் அனைத்து வார்டுகளில் நவீன கழிவறைகள் கட்டப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இதில் கழிவறைகள் சுகாதாரமாக இல்லாமல் இருக்குமானால் அதுகுறித்து புகார் அளிக்க ஒவ்வொரு கழிவறைகளிலும் க்யூஆர் கோடு கொண்ட விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. அதன்மூலம் மாநகராட்சிக்கு புகார் அளிக்கவும் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் திருச்சி மாவட்ட மக்களுக்கு அனைத்து பகுதிகளிலும் சாலை வசதி, தூய குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை வசதிகளும் ஏற்படுத்தி தரும் வகையில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு உத்தரவின் பேரில் மாவட்டம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர். அமைச்சர் நேரு ஏற்பாட்டின் கீழ் சத்திரம் முதல் பஞ்சப்பூர் வரை திருச்சியில் உயர்மட்ட பாலம் அமைப்பதற்கான மண் பரிசோதனை பணிகளும் துரிதமாக நடந்து வருகிறது.

அதுபோல் மாநகராட்சி சார்பில் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கு பொழுது போக்கும் விதமாக இருக்கும் வகையில் பூங்காக்கள், நடைபாதைகள் புனரமைக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தின் மைய பகுதியாக திருச்சி இருப்பதால் திருச்சி மாநகரம் தூய்மையாகவும், அழகுப்படுத்தவும் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார். இதனால் திருச்சியை நவீனப்படுத்தும் முயற்சியில் மாநகராட்சி கமிஷனர் வைத்திநாதன், மேயர் அன்பழகன் முனைப்புடன் உள்ளனர். இதற்கிடையில் மாநகரை அழகுப்படுத்தும் விதமாக மாநகரில் உள்ள மேம்பாலங்களில் அடிப்பகுதிகளில் உள்ள தூண் பகுதிகளில் இயற்கை உபாதைகள் கழிப்பதை தடுக்கும் வகையில் வர்ணம் தீட்டி லைட்டிங் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

மேலும், தூண்கள் உள்ள பகுதிகளில் தடுப்பு கிரில் அமைத்து சுகாதாரம் பேணி காக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் டிவிஎஸ் டோல்கேட் மேம்பாலத்தில் உள்ள ராட்சத தூண்களில் வர்ணம் தீட்டப்பட்டு லைட்டிங் அமைக்கப்பட்டு ஜொலிக்கிறது. அதுபோல் ஆக்டோபஸ் பாலமான அரிஸ்டோ மேம்பாலத்தில் உள்ள தூண்களில் வர்ணங்கள் தீட்டப்பட்டும் பாலத்தின் அடிப்பகுதியில் புளூ கலரில் எல்இடி சீரியல் லைட் அமைக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடந்து வந்தது. தற்போது 99 சதவீத பணிகள் முடிந்து இரவில் அரிஸ்டோ பாலம் மின்னொளியில் ஜொலிக்கிறது. இதுபோல் மாநகரில் உள்ள அனைத்து மேம்பாலங்களும் ஒவ்வொரு விதமாக மிளிர வைக்கும் முயற்சியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : Trichy , The ``Aristo'' flyover will beautify the city of Trichy
× RELATED திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே...