பிரயக்ராஜ்: எம்எல்ஏவை கொன்ற வழக்கின் முக்கிய சாட்சியை கொன்ற வழக்கில் இன்று காலை ஒருவனை என்கவுன்டரில் போலீசார் சுட்டுக் கொன்றனர். ஏற்கனவே ஒருவனை என்கவுன்டரில் போலீசார் சுட்டுக் கொன்றனர். உத்தர பிரதேசத்தில் கடந்த 2005ம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏவாக இருந்த ராஜூ பால் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் சமாஜ்வாதி கட்சி முன்னாள் எம்எல்ஏ அத்திக் அகமது (மாபியா கும்பல் தலைவனாக இருந்து அரசியல்வாதியானவர்) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், ராஜூ பால் கொலை வழக்கில் முக்கிய சாட்சியாக இருந்த உமேஷ் பால் என்பவர் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்ததால் துப்பாக்கி ஏந்தியபோலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
எனினும், 5 பேர் கொண்ட கும்பல் உமேஷ் பாலை அண்மையில் சுட்டுக் கொன்றது. இதில், உமேஷை பாதுகாக்க முயன்ற காவலர்கள் மீதும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில், ஒரு காவலர் உயிரிழந்ததுடன், மற்றொரு காவலர் படுகாயமடைந்தார். இச்சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சட்டப் பேரவை கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில், எதிர்கட்சிகள் இவ்விவகாரம் குறித்து ஆளும் பாஜக அரசுக்கு எதிராக கண்டனங்களை தெரிவித்தன. இதனிடையே உமேஷ் பால் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அர்பாஸ் என்பவரை போலீசர் அண்மையில் என்கவுன்டர் செய்தனர். தொடர்ந்து மற்றொரு குற்றவாளியான ஜாபர் அகமது வீட்டை பிரயக்ராஜ் நகர மேம்பாட்டு ஆணைய (பிடிஏ) நிர்வாகம் புல்டோசரை வைத்து இடித்து தரைமட்டமாக்கியது.
இந்நிலையில் இன்று அதிகாலை பிரயாக்ராஜின் கவுந்தியாரா காவல் நிலைய பகுதியில் குற்றப்பிரிவு போலீசாருக்கும், போலீசாரால் தேடப்பட்டு வந்த விஜய் என்ற உஸ்மானுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் உஸ்மானுக்கு பலத்த காயம் ஏற்பட்டதால் அவர் ஸ்வரூப் ராணி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி இறந்தார். என்கவுன்டரில் மற்றொரு குற்றவாளி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் உத்தரபிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
