×

முத்துப்பேட்டை அலையாத்திக்காடு பகுதியில் அரியவகை பறவைகள் கண்டுபிடிப்பு: இரண்டாம் கட்ட கணக்கெடுப்பில் தகவல்

முத்துப்பேட்டை: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அலையாத்திக்காடு ஆசியா கண்டத்திலேயே மிகப்பெரிய பரப்பளவு கொண்ட காடாகும். 11,885,91 ஹெக்டேர் பரப்பளவில் காணப்படக்கூடிய இக்காடுகள் திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் பரவி உள்ளது. இந்த அலையாத்திக்காட்டில் சீசன் காலங்கள் மட்டுமின்றி ஆண்டு முழுவதும் ஆயிரக்கணக்கான பறவைகள் உள்ளன. சீசன் நேரத்தில் லட்சக்கணக்கான பறவைகள் வருவது வழக்கம். ஆண்டுதோறும் அக்டோபர் முதல் பிப்ரவரி வரை வெளிநாடுகளிலிருந்து பல்வேறு வகை அறிய பறவைகள் வருகிறது. மார்ச் மாதம் முடிவு வரை இந்த அரியவகை பறவைகள் இருக்கும்.

முத்துப்பேட்டை அடுத்த உதயமார்த்தாண்டபுரத்தில் பறவைகள் சரணாலயம் உள்ளது. 111 ஏக்கர் பரப்பளவில் உள்ள பாசன ஏரியில் உள்ளடக்கிய நிலையில் உள்ள இந்த சரணாலயத்தை வனத்துறை பராமரித்து வருகிறது. நவம்பர் துவங்கி பிப்ரவரி மாதம் வரையிலும் பறவைகள் வரத்து அதிகமிருக்கும். சாம்பல் நாரை, வெண் கொக்குகள், கால்கோழி, வெள்ளை அரிவாள் மூக்கன், சிறுதலைவாத்து உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பறவையினங்கள் சரணாலய ஏரியில் தினமும் காணப்படுகின்றன. அதேபோல் தொண்டியக்காடு திட்டு ஏரி மட்டுமின்றி முத்துப்பேட்டை பகுதியில் உள்ள பெரும்பாலான கிராமங்களில் உள்ள ஈரநில பகுதிகளில் அரியவகை வெளிநாடு பறவைகள் காணப்படுவது வழக்கம்.

இந்நிலையில் இப்பகுதிகளில் வனத்துறை சார்பில் பறவைகள் கணக்கெடுப்பு பணிகள் ஒவ்வொரு ஆண்டும், இரண்டு முறை நடைபெறுவது வழக்கம். அதன்படி ஜனவரி மாதம் முதல்கட்ட கணக்கெடுப்பு நடந்த நிலையில், இரண்டாம் கட்ட பறவைகள் கணக்கெடுப்பு பணி நேற்றுமுன்தினம் துவங்கியது. திருச்சி மண்டல தலைமை வன பாதுகாவலர் சதீஷ், மாவட்ட வன அலுவலர் அறிவொளி ஆகியோர் மேற்பார்வையில் முத்துப்பேட்டை வனச்சரக அலுவலர் ஜனனி மற்றும் வனத்துறையினர்களுடன் பறவைகள் ஆராய்ச்சியாளர் பிஎன்ஹெச்எஸ் இயக்குநர் பாலசந்திரன் தலைமையில் மாணவ-மாணவிகள் என மொத்தம் 50பேர் கொண்ட குழுவினர் அலையாத்திகாடு கடற்கரை சார்ந்த ஈரநில பகுதிகளில் 2நாள் பறவைகள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த கணக்கெடுப்பு பணியில் மயிலாடுதுறை கல்லூரி பேராசிரியர்கள் திரிபுரசுந்தரி, பாலசுப்பிரமணியன், பூம்புகார் காலேஜ் பேராசிரியர் நளினி ஆகியோர் மற்றும் மாணவர்கள், வனக்குழு உறுப்பினர்கள், உயிர்ப்பன்மை மேலாண்மை குழுக் உறுப்பினர்கள் மற்றும் வனப் பணியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த குழுவினர்களுடன் முத்துப்பேட்டை வனக்காப்பாளர்கள் கணேசன், சிவநேசன், சகிலா, அபிராமி, ராஜமாணிக்கம், வினோத், வேட்டை தடுப்பு காவலர்கள் பாலசுப்பிரமணியன், நாகராஜ் மற்றும் செல்வராஜ் உள்ளிட்ட வனத்துறையினர் உடன் சென்றனர். நேற்று மாலை வரை நடந்த இந்த கணக்கெடுப்பு பணியில் லட்சக்கணக்கான அரிய வகை பறவைகள் கண்டறிப்பட்டுள்ளது. இதன் முழுவிபரம் மற்றும் எண்ணிக்கை நாளை (இன்று) தெரியும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

71 வகை பறவை இனங்கள்: நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு ஆண்டு தோறும் பல்வேறு நாடுகளிலிருந்து 294 வகையான பறவைகள் வந்து செல்கின்றன. இந்த ஆண்டு பறவைகள் சரணலாயத்திற்கு லட்சக்கணக்கான பறவைகள் வந்து குவிந்துள்ளது. இந்த நீர் பறவைகளை கணக்கெடுக்கும் பணி கடந்த ஜனவரி மாதம் 28, 29 ஆகிய இரண்டு தேதிகளில் நடைபெற்றது. இதில் சுமார் ஒரு லட்சம் நீர் பறவைகள் இருந்ததாக கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் இரண்டாவது கட்டமாக நிலப்பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது. திருச்சி மண்டல தலைமை வன பாதுகாவலர் சதிஷ், நாகப்பட்டினம் வனஉயிரின காப்பாளர் யோகேஸ்குமார் மீனா, கோடியக்கரை வனச்சரகர் அயூப்கான் மற்றும் வனத்துறையினர் என 10 குழுக்களாக பிரிந்து கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த கணக்கெடுப்பில் சோழர்கால கலங்கரை விளக்கம், சித்தர் கட்டம் மற்றும் வனப்பகுதி, கோடியக்கரை, கோடியக்காடு கிராம பகுதிகளில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நிலப் பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற்றது. கணக்கெடுப்பில் கருங்குயில், புள்ளி குயில், மீன் கொத்தி, மரங்கொத்தி, கவுதாரி, செண்பகம், மணிப்புறா, வக்கா உள்ளிட்ட 71 வகையான பறவை இனங்கள் கண்டறியப்பட்டது. இந்த கணக்கெடுப்பில் சுமார் 5,000க்கும் மேற்பட்ட நிலப் பறவைகள் உள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Muthupettai Alayathikkadu , Discovery of rare species of birds in Muthupettai Alayathikkadu area: Information from the second phase of survey
× RELATED முத்துப்பேட்டை அலையாத்திக்காடு...