இனி காட்டுத்தீ பிரச்னை இருக்காது; கொடைக்கானலில் கொட்டியது மழை: வார விடுமுறையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் ரசிப்பு

கொடைக்கானல்: கொடைக்கானலில் குளிர், வெயில் என இதமான சூழலை வார விடுமுறையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் வெகுவாக ரசித்தனர். கொடைக்கானலில் வார விடுமுறை நாளான நேற்று சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் குவிந்தனர். மோயர் பாயிண்ட், குணா குகை, பசுமை பள்ளத்தாக்கு, பில்லர் ராக், பைன் பாரஸ்ட் உள்ளிட்ட இடங்களில் அதிகளவில் குவிந்து இயற்கையின் பசுமை கொஞ்சும் அழகை கண்டு ரசித்தனர். ஏரியில் படகு சவாரி, ஏரிச்சாலையில் குதிரை சவாரி, சைக்கிள் ரைய்டிங் செய்தும் மகிழ்ந்தனர்.

பிரையண்ட், ரோஜா, செட்டியார் பூங்காக்களிலும் சுற்றுலாப் பயணிகள் திரண்டு பல வண்ண மலர்களை கண்டு ரசித்தனர். கொடைக்கானலில் கடந்த பல தினங்களாக இரவில் குளிரின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் நேற்று காலை முதலே மேகம் மூட்டத்துடன் குளிர், அதன்பின் சற்று வெயில் நிலவியது. கொடைக்கானல் வந்த சுற்றுலாப் பயணிகள் இந்த இதமான சூழலை ரசித்து சென்றனர். கொடைக்கானலில் நிலவி வரும் குளிரின் தாக்கம் இன்னும் சில தினங்களுக்கு நீடிக்கும் என வானிலை ஆய்வு மைய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

கொட்டி தீர்த்த மழை: கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த பல மாதங்களாக மழையின்றி வறண்ட சூழல் நிலவி வந்தது. இதனால் அடிக்கடி காட்டுத்தீ ஏற்பட்டு வந்தது.இந்நிலையில் நேற்று காலை முதலே கொடைக்கானலில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மாலையில் சுமார் ஒரு மணிநேரம் கனமழை பெய்தது. இந்த மழையால் கொடைக்கானலில் நிலவி வந்த வறண்ட சூழல் மாறியதுடன், பகல் வெப்பமும்,  இரவு கடும் குளிரும் குறைந்தது. மழை ெதாடரும் நிலையில் கொடைக்கானலில் கோடை சீசன் முன்னதாகவே துவங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Related Stories: