கால்கள் அகற்றப்பட வேண்டிய நிலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி இரு கால்களுடன் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்: ராஜீவ் காந்தி மருத்துவமனை டாக்டர்கள் சாதனை

சென்னை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பனங்காட்டு நெரு அம்மன்நகரை சேர்ந்தவர் கனிமொழி. அவரது கணவன் முத்தழகன் 12 வருடங்களுக்கு முன் விபத்தில் உயிரிழந்துள்ளார். இவர்களுக்கு ஆதித்யா(17) வயது மகனும், அபிநயா என்ற 13 வயது மகளும் உள்ளனர். ஆதித்யா 12ம் வகுப்பு, அபிநயா சீர்காழியில் உள்ள பள்ளியில் 9ம் வகுப்பும் படித்து வருகிறார். முத்தழகன் இறந்துவிட்ட நிலையில் கனிமொழி வயல்வேலைக்கு சென்று குழந்தைகளை காப்பாற்றி வந்தார். கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு அபிநயாவுக்கு  உடல்நிலை சரியில்லாமல் போனது. சமீபகாலமாக உடலில் சொறி, கால்களில் நிறமாற்றம் மற்றும் உணர்வின்மை, நடக்க கடினமாக இருந்துள்ளது. இதையடுத்து அவரது தாயார் கனிமொழி, மயிலாடுதுறை, சீர்காழி  உள்ளிட்ட பல மருத்துவமனைகளில் மகளுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் அபிநயாவுக்கு திடீரென இரண்டு கால்களும் கருப்பாக மாறியுள்ளது.  இதையடுத்து மாணவியின் கால்களில் வலி ஏற்பட்டு படுத்த படுக்கையானார். மாணவியின் தண்டுவடத்தில் ரத்தக்கட்டு உருவாகி, அதனால் கால் விரங்களுக்குச் செல்லும் ரத்த ஓட்டம் தடைப்பட்டு கால் அழுகல் நோய் ஏற்பட்டது பரிசோதனையில் தெரியவந்தது.  இதைத்தொடர்ந்து மகள் அபிநயாவை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தயார் கனிமொழி சேர்த்திருக்கிறார். அங்கே பரிசோதனை செய்த மருத்துவர்கள் கால்கள் எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம் என்று கூறியுள்ளனர். ஆய்வுகளின்படி, இந்த நோய் லட்சத்தில் 10 பேருக்கு பாதிக்கக்கூடியதாகும்.  ஏழை குடும்பத்தைச் சேர்ந்த மாணவி அபிநயா மருத்துவ செலவு செய்ய முடியாமல் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.

இதனிடையே மாணவி அபிநயா பேசும் வீடியோ ஒன்று வெளியானது. அதில் பேசிய மாணவி, ‘ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன். இங்கே காலை எடுக்கணும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். காலை எடுத்து விட்டால் எனக்கு என்ன வாழ்க்கை இருக்கிறது. எனது கால்களை சரி செய்து தரும்படி முதலமைச்சர் ஐயாவை கேட்கிறேன்.’ இவ்வாறு உயிருக்கு போராடிய நிலையில் தமிழ்நாடு முதலமைச்சரிடம் உதவி கோரியிருந்தார். அபிநயா பேசிய வீடியோவை சமூக வலைத்தளங்களில் பார்த்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உடனடியாக அபிநயாவை சென்னைக்கு வரவழைத்து ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற ஏற்பாடு செய்தார். அங்கு மாணவி அபிநயாவுக்கு முதற்கட்ட சிகிச்சையளிக்கப்பட்டது.

தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்குத் தேவையான மருத்துவ சிகிச்சையளிக்கப்பட்டது. சிகிச்சைபெற்ற அபிநயாவை ஜனவரி மாதம் 23ம் தேதி நேரில் சந்தித்து நலம் விசாரித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சிறந்த முறையில் சிகிச்சையளிக்க மருத்துவர்களிடம் அறிவுறுத்தினார். அதனை தொடர்ந்து அந்த மாணவிக்கு ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து ராஜீவ்காந்தி மருத்துவமனை முதல்வர் தேரணிராஜன் கூறியதாவது: எஸ்எல்இ என்னும் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட சிறுமியின் கால் விரல்களில் மட்டும் நோயின் பாதிப்பு கூடுதலாக இருக்கின்றது.

இதனால் விரல்கள் உதிர்ந்து போய் காணப்பட்டது. சிகிச்சை அளிக்கப்பட்டதை தொடர்ந்து நன்றாக நிற்ககூடிய நிலையில் உள்ளார். கால்கள் நன்றாக உள்ளதால் கால்கள் அகற்றப்படவில்லை. அவருக்கு பிரத்தியேகமான காலணியும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் அந்த காலணியை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்ற பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளது. அனைத்து சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு பூரண குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளார்.

Related Stories: