×

பிரிவினையை தூண்டும் வகையில் அறிக்கை வெளியிட்ட அண்ணாமலைக்கு போலீஸ் சம்மன்?: விசாரணைக்குப் பின்னர் கைதாவாரா

சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பி விசாரணை நடத்த மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர்.
தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வடமாநில தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். ”வடமாநிலத்தவர் மீதான வெறுப்பு பிரசாரங்களுக்கு முடிவு கட்டுவாரா தமிழக முதலமைச்சர்?” என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தி.மு.க. எம்.பி.க்கள், அமைச்சர்கள் வடமாநிலத்தவர்களை பற்றி ஏளனமாக பேசிய பேச்சுக்களை குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கை வன்முறையை தூண்டும் வகையில் இருப்பதாகவும், அவர் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னை மண்ணடியைச் சேர்ந்த குமரன் என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.

அதன் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் அண்ணாமலை மீது கலகத்தை தூண்டும் வகையில் பேசுவது, பேச்சால் அல்லது எழுத்தால் உணர்ச்சியை தூண்டுதல், அறிக்கை மூலமாக குறிப்பிட்ட நபர் மீது குற்றம் சாட்டி பிரிவினையை தூண்டுதல், உள்நோக்கத்துடன் செயல்படுதல் ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து அண்ணாமலை டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், ”முடிந்தால் என்னை கைது செய்யுங்கள்” என்று தமிழக அரசுக்கு சவால் விடுத்தார். இந்த நிலையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர்கிரைம் போலீசார் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை உள்ளிட்ட விஷயங்களை ஆராய்ந்து சட்ட நிபுணர்களுடன் கலந்து பேசி முடிவு எடுக்க உள்ளனர்.

எனவே அவர் மீது உடனடியாக கைது நடவடிக்கை பாயுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த விஷயத்தில் அடுத்த கட்டமாக சம்மன் அனுப்பி அவரை விசாரணைக்கு அழைக்கலாமா? என்றும் மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் ஆலோசனை நடந்து வருகின்றனர். இதுபற்றி உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, அரசியல் தலைவர்கள் மீதான வழக்குகளில் நடவடிக்கை எடுப்பது தொடர்பாக கோர்ட் சில அறிவுரைகளை வழங்கி இருக்கிறது. அதனை பின்பற்றி இந்த வழக்கில் நாங்கள் நடவடிக்கை மேற்கொள்வோம். இது தொடர்பாக சட்ட நிபுணர்களுடன் கலந்து பேசி ஆலோசனை செய்த பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும். அண்ணாமலை ஒரு ஐபிஎஸ் அதிகாரி. அவருக்கு சட்ட நடைமுறைகள் தெரியும் என்று நினைக்கிறோம். எடுத்தவுடன் ஒருவரை கைது செய்ய முடியாது. ஏன் எல்லா வழக்கிலும் கைது செய்ய முடியாது.

இது தெரியாமல் சிலர் பேசுகின்றனர். சென்னைப் போலீசைப் பொறுத்தவரை சட்டப்படிதான் செய்வோம். எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செய்ய முடியாது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.வடமாநில தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பாக திருப்பூரில் 3 வழக்குகள், கிருஷ்ணகிரியில் ஒரு வழக்கு, தூத்துக்குடியில் ஒரு வழக்கு என மொத்தம் 5 வழக்குகளை போலீசார் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளை போலீசார் தேடி வருகிறார்கள். அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதற்காக தனிப்படை போலீசார் டெல்லி விரைந்துள்ளனர். மேலும் பீகாருக்கும் தனிப்படை போலீசார் செல்கிறார்கள். இந்த நிலையில் அண்ணாமலை மீது போடப்பட்டு உள்ள வழக்குகள் தொடர்பாக போலீசார் ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுக்க இருப்பது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Samman ,Annamalay ,Kaithawara , Annamalai police summons for separatist statement?: Arrested after investigation
× RELATED ஐபிஎல் தொடர் சட்டவிரோதமாக...