×

சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்ட வீடியோக்கள் பொய் என்பதை புலம்பெயர் தொழிலாளர்களிடம் விளக்கினோம்: பீகார் அதிகாரிகள் குழு பேட்டி

கோவை: புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து பொய்யாக வீடியோக்களை வெளியிட்டுள்ளது தெரியவந்துள்ளது என பீகார் அதிகாரிகள் குழு தெரிவித்துள்ளது. கோவையில் ஆலோசனை கூட்டத்துக்கு பின் பீகார் மாநில ஊரக வளர்ச்சித்துறை செயலர் பாலமுருகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், சென்னை, திருப்பூர் மாவட்டத்தை தொடர்ந்து கோவையில் ஆய்வு செய்துள்ளோம். கோவையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் கலந்துரையாடினோம். சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்ட வீடியோக்கள் பொய் என்பதை புலம்பெயர் தொழிலாளர்களிடம் விளக்கினோம். இந்த வீடியோக்கள் பொய்யான வீடியோக்கள் என்பதை அவர்கள் புரிந்து கொண்டனர். மாவட்ட நிர்வாகம், காவல்துறை உதவியுடன் புலம்பெயர் தொழிலாளர்களின் அச்சத்தை போக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தொழில் நிறுவனங்களும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பை ஏற்பாடு செய்துள்ளது என தெரிவித்தார். தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற போலியான வீடியோ மற்றும் தவறான தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவியது. இதனால் வடமாநில தொழிலாளர்கள் கூட்டம், கூட்டமாக தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுப்பதாகவும் ஒரு தகவல் பரவியது. இது பீகார் மாநிலத்திலும் எதிரொலிக்கவே 4 பேர் கொண்ட குழுவை அம்மாநில அரசு தமிழ்நாட்டிற்கு அனுப்பியது. அந்த குழுவினர் இன்று கோவையில் வட மாநிலத்தவர்கள் அதிகம் வேலை பார்க்க கூடிய தனியார் நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

தொடர்ந்து அங்கு பணியாற்றி வரும் வடமாநில தொழிலாளர்களை நேரில் சந்தித்து பேசினர். அப்போது தங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. நாங்கள் இங்கு நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்வதாக வட மாநிலத்தவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து பொய்யாக வீடியோக்களை வெளியிட்டுள்ளது தெரியவந்துள்ளது என பீகார் அதிகாரிகள் குழு தெரிவித்துள்ளது.


Tags : Bihar , Migrant workers, fake video, Bihar officials group
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் பல்வேறு...