×

தயார் நிலையில் திருச்செந்தூர் மார்க்கம்; நெல்லை - தென்காசி இடையே மார்ச் 9ல் 121 கிமீ வேகத்தில் ரயில் சோதனை ஓட்டம்: வேகம் பெற இருக்கும் தென் மாவட்ட ரயில்கள்

நெல்லை:  நெல்லை - தென்காசி இடையே 121 கிமீ வேகத்தில் அதிவேக ரயில் சோதனை ஓட்டம் வரும் 9ம் தேதி வியாழக்கிழமையும், நெல்லை - திருச்செந்தூர் இடையே  அதிவேக ரயில் சோதனை ஓட்டம் வரும் 15ம் தேதி புதன்கிழமையும் நடக்கிறது. நெல்லை முதல் சென்னை வரை இரட்டை ரயில்பாதை பணிகள் முடிவடைந்து விட்ட நிலையில், விரைவில் தென்மாவட்ட ரயில்கள் வேகம் எடுக்கும் என தெரிகிறது.

தெற்கு ரயில்வேக்கு வருவாயை அள்ளித்தரும் வழித்தடங்களாக தென்மாவட்ட ரயில் தடங்கள் உள்ளன. இரட்டை ரயில்பாதை இல்லாததால், இப்பாதையில் குறைவான ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக வேகமாக பணிகள் நடத்தப்பட்டு, இரட்டை ரயில்பாதை பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.  சமீப காலமாக மின்மயமாக்கல் பணிகளுடன், தென் மாவட்ட ரயில் பாதைகள் பலப்படுத்தப்பட்டு, ரயில்களின் வேகம் அதிகரிக்கவும் பணிகள் நடந்து வருகிறது. இதில் குறிப்பாக 64 கிமீ நீளம் கொண்ட நெல்லை -  தென்காசி ரயில் வழித்தடம் 2012ல் அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டு  தற்போது வரை 70 கிமீ வேகத்தில் மட்டுமே ரயில்கள் இயங்கி வந்த நிலையில் தற்போது இருப்புப் பாதைகள் பலப்படுத்தப்பட்டு 110 கிமீ வேகத்துக்கு ரயில்கள் இயங்கும் அளவுக்கு பணிகள் நடந்து முடிந்துள்ளன.
 
இதன் ஒரு பகுதியாக நெல்லை ரயில் நிலையத்திலிருந்து தென்காசி வரை 121 கிமீ வேகத்தில்  ரயில் இயக்கி சோதனை செய்யப்பட இருக்கிறது. நெல்லையில் இருந்து வரும் 9ம் தேதி வியாழக்கிழமை  காலை 9.20 மணிக்கு புறப்படும் அதிவேக ரயிலானது 10.15 மணிக்கு தென்காசி சென்றடையும்.      மறுமார்க்கத்தில் தென்காசியில் இருந்து 10.45 மணிக்கு புறப்படும் ரயில் நண்பகல் 12 மணிக்கு நெல்லையை சென்றடையும்.  நெல்லை - தென்காசி இடையே அதிவேக ரயில் சோதனை முடிந்த பின் நெல்லையிலிருந்து மதியம் 12.05 மணிக்கு புறப்படும் ரயில் இரவு 8.45 மணிக்கு சென்னை எழும்பூரை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதைப்போல 61 கிமீ நீளம் கொண்ட நெல்லை -  திருச்செந்தூர் மார்க்கத்தில் 70 கிமீ இருந்து 110 கிமீ வேகம் அதிகரிக்கப்பட்டு தற்போது ரயில்கள் இயக்கப்பட உள்ளன. வரும் 15ம் தேதி புதன்கிழமை  வழக்கமாக நடக்கும் ரயில் வேக சோதனை நெல்லை - திருச்செந்தூர் இடையே நடைபெற உள்ளது. மாலை 3 மணிக்கு நெல்லையில் புறப்படும் ரயில் 4.15 மணிக்கு திருச்செந்தூரை சென்றடையும். திருச்செந்தூரில் மாலை  4.45 மணிக்கு புறப்படும் ரயில், நெல்லையை மாலை 6:15 மணிக்கு சென்றடையும்.

இதுகுறித்து ரயில் பயணிகள் கூறுகையில், ‘‘ரயில் தண்டவாளங்கள் பலப்படுத்தப்பட்டு மின்மயமாக்கல் பணிகள் முடிந்தவுடன் ரயில் கால அட்டவணை மாற்றம் செய்யப்பட்டு ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட வேண்டும். குறிப்பாக நெல்லை - சென்னை இடையே இரட்டை அகல ரயில் பாதை பணிகள் 100 சதவீதம் முடிவடைந்து விட்டதால், 8 மணி நேரத்தில் சென்னை செல்ல முடியும். இதற்காக பகல் நேர தேஜாஸ், வந்தே பாரத் போன்ற ரயில்களை இயக்க வேண்டும்.

தற்போது நெல்லை தென்காசி இடையே மின்மயமாக்கல் முடிவு பெறும் நிலையில்  ரயில்களின் வேகமும் அதிகரிக்கப்பட இருப்பதால் தென்காசி வழியாக நெல்லை தாம்பரம் இடையே ‘தாமிரபரணி எக்ஸ்பிரஸ்’ என்ற பெயரில் ரயில் இயக்கப்பட வேண்டும் என கோட்ட அதிகாரிகளிடம் வலியுறுத்தி வருகிறோம். தென்காசி வழியாக இயங்கும் நெல்லை மேட்டுப்பாளையம் ரயில் தினசரி ஆகவும், நெல்லையிலிருந்து தென்காசி வழியாக மைசூருக்கும் ரயில்களில் இயக்கப்பட வேண்டும்.’’ என்றனர்.

Tags : Thiruchendur Markam ,Nelli-South Kasi ,Nela-South Kasi , Tiruchendur Margam in readiness; Train trial run between Nellai - Tenkasi on March 9 at 121 kmph: Southern district trains set to gain speed
× RELATED திரவ நைட்ரஜன் மூலம் தயாரிக்கப்படும்...