செம்பட்டி- நிலக்கோட்டை இடையே நான்கு வழிச்சாலை பணி முடியும் முன்பே மரக்கன்றுகள் நட்டு பராமரிப்பு: பொதுமக்கள், சமூகஆர்வலர்கள் பாராட்டு

நிலக்கோட்டை: செம்பட்டி- நிலக்கோட்டை இடையே ரூ.40 கோடி மதிப்பீட்டில் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி இரவு, பகலாக மும்முரமாக நடந்து வருகிறது. இப்பணிகள் முழுமையாக முடியும் முன்பே சாலையோரம் 1000க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருவதற்கு பொதுமக்கள், சமூகஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். நிலக்கோட்டை அடுத்த செம்பட்டியில் இருந்து கொடைரோடு, நிலக்கோட்டை சாலை, காமபிள்ளை சத்திரம் பிரிவு வரையிலான இரு வழிச்சாலையை முதலமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.40 கோடி ஒதுக்கப்பட்டு நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இச்சாலை பணி இரவு, பகலாக மும்முரமாக நடந்து வருவதால் தற்போது வரை 80 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளது.

இந்நிலையில் கொடைரோடு நெடுஞ்சாலை துறை சார்பில் இச்சாலை பணிகள் முழுமையாக முடியும் முன்பே சாலையோர இருபுறங்களிலும் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பில் 1000க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நடவு செய்து, தினந்தோறும் டேங்கர் லாரியில் தண்ணீர் பாய்ச்சி பரமாரித்து வருகின்றனர். நெடுஞ்சாலைத்துறை உட்கோட்ட உதவிப்பொறியாளர் யோகவேல் தலைமையில் நடந்து வரும் மரக்கன்று நடும் பணிகள் பசுமை புரட்சிக்கு முக்கியத்துவம் அளித்து செய்யப்படுவதாக பொதுமக்கள் பாராட்டு தெரிவத்துள்ளனர். இதுகுறித்து இயற்கை ஆர்வலரும், பசுமை புரட்டியாளரும், கவுன்சிலருமான ராஜதுரை கூறியதாவது: தமிழகத்தில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை சிறப்பாக உடனுக்குடன் செய்து வரும் நமது முதல்வர் மு.க.ஸ்டாலின். அந்த வகையில் நீண்ட ஆண்டுகளாக குறுகலாக பல்வேறு விபத்துகளை ஏற்படுத்தி வந்த பழநி சாலையான செம்பட்டி- நிலக்கோட்டை காமபிள்ளை சத்திரம் வரையிலான இரு வழிச்சாலைக்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் சுமார் ரூ,40 கோடி நிதி ஒதுக்கப்பட்டு நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணிகள் இரவு, பகலாக தீவிரமாக நடந்து வருகிறது.

இப்பணியின் போது சாலையோரம் ஒரு சில மரங்களை வெட்டும் சூழ்நிலை ஏற்பட்டது. அதனை உணர்ந்த நெடுஞ்சாலை துறையினர் தற்போது சுமார் 3 கிலோ மீட்டர் சாலையின் இருபுறங்களிலும் புங்கன், புளியமரம், வேம்பு உட்பட 1000க்கும் மேற்பட்ட மரங்களை போர்க்கால அடிப்படையில் நடவு செய்து அதனை உயிர்ப்புடன் பராமரிக்கும் பணியையும் விறுவிறுப்பாக செய்து வருகின்றனர். இது இப்பகுதி மக்கள், சமூக ஆர்வலர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதேபோல் சாலை விரிவாகக பணியின் போது வெட்டப்பட்ட மரங்களை விட நான்கு மடங்கு அதிகமாக சுமார் 3 கிலோ மீட்டருக்கு 1000க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடுவதால் இன்னும் சில ஆண்டுகளில் இச்சாலை பசுமை வழி சாலையாக மாறும் என்பதில் எந்த ஐயமில்லை. இதற்கு தமிழக முதல்வர், நெடுஞ்சாலை துறையினருக்கு பொதுமக்கள் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு கூறினார்.

Related Stories: