சுற்றுலாத்தலமான ஏலகிரி மலையில் திரண்டனர் வெயிலுக்கு இதமாக படகு சவாரி செய்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்

ஏலகிரி: சுற்றுலாத்தலமான ஏலகிரி மலையில் வெயிலுக்கு இதமாக சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட ஏலகிரி மலை 14 கிராமங்களை கொண்ட  தனி ஊராட்சியாக செயல்பட்டு வருகிறது. இது தமிழ்நாட்டில் சிறந்த சுற்றுலா தலங்களில் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்று வளர்ச்சியுற்ற சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. ‘ஏழைகளின் ஊட்டி’ என்றழைக்கப்படும் பெருமையுடைய ஏலகிரி, திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மிகச்சிறந்த கோடைவாசஸ்தலமாகும். இப்பகுதியில் தூய்மையான காற்று வீசுவதால் அதை அனுபவிக்கும் ஆர்வம் கொண்டவர்கள் அடிக்கடி இங்கு வந்து தங்கிச் செல்கின்றனர். உயரத்தில் அமைந்துள்ள இந்த மலைப் பகுதியை அடைய பொன்னேரி கூட்டுச் சாலையில் இருந்து 14 கி.மீ. தூரம் பயணம் செய்ய வேண்டும்.

வாகனங்களில் சுமார் 30 நிமிட மலைப்பாதை பயணம் ஆகும். மலைப் பாதை 14 கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்டதாகவும், பாரதியார், திருவள்ளுவர், இளங்கோ, கம்பர், கபிலர், அவ்வையார், பாரி, காரி, ஓரி, ஆய், அதியமான், நல்லி, பேகன்  ஆகிய பெயர்களை இந்த கொண்டை ஊசி வளைவுகளில் பெயர் எழுதப்பட்டுள்ளன. இங்கு படகு இல்லம், இயற்கை பூங்கா, சிறுவர் பூங்கா, இயற்கை மூலிகை பண்ணை , பண்டேரா பார்க், செல்பி பார்க், மங்களம் சுவாமிமலை ஏற்றம், உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் இங்கு உள்ளன. இதனைக் காண பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாநிலங்களில் இருந்தும் தினமும் இங்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் நேற்று ஞாயிறு விடுமுறை தினம் என்பதால்  ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏலகிரி மலையில் திரண்டனர். தொடர்ந்து, கடும் வெயிலிலும் உற்சாகமாக  படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

Related Stories: