×

திருவள்ளுவர் சிலைக்கு ரசாயன முலாம் பூசும் பணி நிறைவு: 7 மாதங்களுக்கு பிறகு பொதுமக்கள் பார்வையிட அனுமதி..!!

குமரி: குமரி கடற்கரையில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு ரசாயன முலாம் பூசும் பணிகள் நிறைவடைந்த நிலையில் 7 மாதங்களுக்கு பிறகு பொதுமக்கள் பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி கடலில் 133 அடி உயரத்தில் வள்ளுவர் சிலை அமைந்துள்ளது. 2000 ஆண்டு திறக்கப்பட்ட சிலையை உப்பு காற்றில் இருந்து பாதுகாக்க 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ரசாயன கலவை பூசப்படும். அந்த வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து ரசாயன கலவை பூசும் பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தன. இரும்பு கம்பிகளை வைத்து சாரங்கள் அமைக்கப்பட்டு நடைபெற்று வந்த பணிகள் முழுமையாக முடிவடைந்தன.

இதற்காக சுமார் ஒரு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. வள்ளுவர் சிலை புது பொலிவு பெற்றிருக்கும் நிலையில், 7 மாதங்களுக்கு பிறகு பொதுமக்கள் செல்ல விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது. இன்று முதல் குமரி கடற்கரையில் இருந்து வள்ளுவர் சிலைக்கு படகு சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. குமரி சுற்றுலாத்தலத்தில் அமைந்துள்ள பூம்புகார் படகு குழாமில் காலை முதல் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். படகு சவாரி செய்து வள்ளுவர் சிலையை பார்த்த சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர். வேலைநாளின் போது அங்கு சுற்றுலா பயணிகள் பலர் கூடியிருந்தனர். எனவே வார இறுதியில் அதிகம் பேர் பார்வையிட வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Tags : Thiruvalluvar , Thiruvalluvar statue, chemical coating, public admission
× RELATED கிண்டியில் பெண் தவறவிட்ட 40 சவரன், ரூ.61...