×

மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியின்றி சிபிசிஎல் குழாயில் கச்சா எண்ணெய் செலுத்தப்படாது: நாகை மாவட்ட ஆட்சியர் உறுதி

நாகை: மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியின்றி சிபிசிஎல் குழாயில் கச்சா எண்ணெய் செலுத்தப்படாது என்று  நாகை மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்துள்ளார். பட்டினசேரி கிராம மீனவர்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் ஆட்சியர் உறுதி அளித்துள்ளார். சிபிசிஎல் கொலையில் ஏற்பட்டுள்ள கசிவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி மீனவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். சிபிசிஎல் கச்சா எண்ணெய் குழாய் சேதமடைந்த இடத்தில் ஆட்சியர் அருண் தம்புராஜ் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

நாகை மாவட்டம் நாகூரை அடுத்த நரிமணத்தில், பொதுத்துறை நிறுவனமான சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் சுத்திகரிப்பு நிலையம் (சி.பி.சி.எல்.) உள்ளது. காவிரி படுகையில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தால் எடுக்கப்படும் கச்சா எண்ணெய் இங்கு சுத்திகரிக்கப்பட்டு லாரிகள், கப்பல்கள் மூலம் வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. கப்பல்களுக்கு கச்சா எண்ணெய்யை கொண்டு செல்ல நரிமணத்தில் உள்ள சி.பி.சி.எல். நிறுவனத்தில் இருந்து சாமந்தான்பேட்டை வழியாக நாகூர் பட்டினச்சேரி மீனவ கிராமம் வரை கடற்கரையில் எண்ணெய் குழாய் புதைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த 2-ந் தேதி நள்ளிரவு பட்டினச்சேரி கடற்கரையில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கச்சா எண்ணெய் வெளியேறி கடலில் கலந்தது. இதனால் கடல் நீர் முற்றிலுமாக கருப்பு நிறமாக மாறியது. இதனால் பொது மக்களும், கடல் வாழ் உயிரினங்களும் பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சி.பி.சி.எல். மற்றும் ஓ.என்.ஜி.சி. அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று உடைப்பு ஏற்பட்டுள்ள இடத்தை ஆய்வு செய்து குழாய் உடைப்பை அடைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் வெள்ளிக்கிழமை மாலை 5 மணி அளவில் குழாய் சீரமைக்ககப்பட்டது. இந்நிலையில் சனிகிழமை சிபிசிஎல் கச்சா எண்ணெய் குழாய் நேற்று அடைக்கப்பட்டதாக கூறிய அதே இடத்தில் மீண்டும் கசிவு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மீண்டும் அதே இடத்தில் பழுது நீக்க பணியில் இயந்திரங்கள் மற்றும் ஊழியர்களைக் கொண்டு பணி நடைபெற்று வந்தது.குழாயில் கசிவு ஏற்படுமா என சோதனை செய்ய சிபிசிஎல் நிர்வாகம் கச்சா எண்ணெயை குழாயில் அழுத்தத்துடன் செலுத்திய போது கசிவு ஏற்பட்டது. அதனால் உயர் அழுத்தத்தில் குழாயில் ஆயில் செலுத்தும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது.மேலும் தொழில்நுட்ப குழுவினர் சீரமைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மீண்டும் அந்த பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.இதனால் அப்பகுதியில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையில் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியின்றி சிபிசிஎல் குழாயில் கச்சா எண்ணெய் செலுத்தப்படாது என்று மாவட்ட நாகை மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்துள்ளார். பட்டினச்சேரி கிராம மீனவர்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் ஆட்சியர் உறுதி அளித்துள்ளார்.



Tags : CBCL ,Nagai , No crude oil will be pumped into CBCL pipeline without permission from district administration: Nagai district collector assures
× RELATED கையகப்படுத்திய நிலத்திற்கு இழப்பீடு வழங்காததால் தேர்தல் புறக்கணிப்பு